ஈரோடு: உதயசூரியன் சின்னத்துடன் கூடிய முக கவசம் அணிந்து வந்த, மொடக்குறிச்சி, தி.மு.க., வேட்பாளர், முககவசத்தை அகற்றிய பிறகே ஓட்டு போட அனுமதிக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, தி.மு.க., வேட்பாளராக சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகிறார். ஈரோடு, மாணிக்கம்பாளையம் பகுதியில் வசிக்கிறார். அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடிக்கு, நேற்று ஓட்டுப்போட வந்தார். வெள்ளை நிற முக கவசம் அணிந்திருந்தார். அதில் உதயசூரியன் சின்னத்துடன், '2021 வெல்லும் தி.மு.க.,' என்று எழுதப்பட்டிருந்தது. ஓட்டுச்சாவடி அருகே வந்தபோது, அவரை ஒரு போலீஸ் எஸ்.ஐ., தடுத்து, 'கட்சி சின்ன முககவசத்துடன் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது' என்றார். அத்துடன் ஓட்டுச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த, நீல நிற துணி முக கவசத்தை வழங்கினார். அவரும் மறுப்பு சொல்லாமல், அதை பெற்று அணிந்து கொண்டு, ஓட்டுப்போட்டு சென்றார். ஓட்டுச்சாவடி மையத்துக்குள் கட்சிக்கொடி, சின்னம் போன்றவைகளை கொண்டு செல்லக்கூடாது. இது சாமான்ய மக்களுக்கே தெரியும். ஆனால், எம்.எல்.ஏ., - எம்.பி., - அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் மறந்து விட்டது, பிற வாக்காளர்களை ஆச்சர்யப்பட வைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE