நாமக்கல்: சாலையோரம் கிழிக்கப்பட்ட நிலையில், சிதறி கிடந்த, 'தங்க காசு' கூப்பனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'இவற்றை, வினியோகம் செய்தது, தி.மு.க.,- அ.தி.மு.க.,' என, மாறி மாறி புகார் செய்வதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, ஆறு தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், அ.தி.மு.க.,- தி.மு.க., நேரடியாக மோதுகின்றன. திருச்செங்கோட்டில், கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தி.மு.க., சின்னத்தில் போட்டியிடுகிறார். மேலும், அ.ம.மு.க., தே.மு.தி.க., ம.நீ.ம., நா.த.க., என, ஐந்து முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, வாக்காளர்களை, வேட்பாளர்கள், 'நன்கு' கவனித்துள்ளனர். ஒரு ஓட்டுக்கு, குறைந்த பட்சம், 500 ரூபாய், அதிக பட்சம், 1,000 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதனால், வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பது, வைட்டமின், 'ப' ஆகும். இதற்கிடையில், வாக்காளர்களுக்கு, தங்க காசு டோக்கன் வினியோகம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தங்க காசு டோக்கன், நாமக்கல் கோட்டை சாலை மற்றும் மோகனூரில் பல்வேறு இடங்களில், சாலையோரம், கிழித்து எரியப்பட்ட நிலையில் சிதறி கிடந்துள்ளது. அதனால், அவற்றை வினியோகம் செய்தது, தி.மு.க.,வா,- அ.தி.மு.க.,வா என்பது புரியாத புதிராக உள்ளது. மேலும், பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, யாராவது விஷமிகள் செய்த வேலையா என்பதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் மெகராஜ் கூறுகையில், ''காலையில் இந்த புகார் வந்தது. யார் வினியோகம் செய்தது என்பது தெரியவில்லை. இரு கட்சியினரும் மாறி மாறி புகார் தெரிவிக்கின்றனர். விசாரிக்க சொல்லியிருக்கிறேன்,'' என்றார். எஸ்.பி., சக்தி கணேசனிடம் கேட்டபோது, ''இது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE