ஆத்தூர்: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பெயர், சின்னத்தை மறைத்ததாக கூறி, அ.ம.மு.க., வேட்பாளர், ஓட்டுச்சாவடி மையத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
சட்டசபை தேர்தலையொட்டி, சேலம் மாவட்டம், ஆத்தூர், கடைவீதி ஓட்டுச்சாவடியில், நேற்று காலை, ஓட்டுப்பதிவு தொடங்கி, 8:00 மணி வரை, 92 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அப்போது, ஓட்டுப்போடச் சென்ற, அ.ம.மு.க., இளைஞர் அணி நிர்வாகி ராகுல்காந்தி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீதுள்ள, வரிசை எண்: 7ல், அ.ம.மு.க., வேட்பாளர் மாதேஸ்வரன், புகைப்படம், சின்னம், பட்டன் மீது, பசைபோன்று ஒட்டியிருந்தது. அதனால், அவர் ஓட்டுப்பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. அதேபோல், வரிசை எண்: 6ல், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சிவக்குமார், 8ல், அண்ணா திராவிடர் கழகம் வேட்பாளர் மாதேஸ்வரி பெயர், சின்னம் மீதும், அதேபோன்று பசை இருந்தது. இதுகுறித்து, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் கேட்டபோது, மண்டல அலுவலர் பிரவீன்ராஜ், அந்த பசையை சரிசெய்ய முயன்றார். ஆனால், வேட்பாளர் பெயர், சின்னத்தை வேண்டுமென்றே மறைத்ததாக கூறி, அ.ம.மு.க.,வினர், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்து, ஓட்டுப்பதிவை நிறுத்தினர். இதையறிந்து, அக்கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் வந்து, அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினார். 8:30 மணிக்கு, மாதேஸ்வரன், ஓட்டுச்சாவடிக்குள் தரையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன், அ.ம.மு.க., - தே.மு.தி.க.,வினர், ம.நீ.ம., வேட்பாளர் சிவக்குமார், ச.ம.க.,வினர் பங்கேற்றனர். உதவி தேர்தல் அலுவலர் வரதராஜன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ஜெயக்குமார், டி.எஸ்.பி., வேலுமணி ஆகியோர், பேச்சு நடத்தினர். அப்போது, 'மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்; பசை ஒட்டியது, அவற்றை சரிசெய்ய முயன்ற ஓட்டுச்சாவடி மைய தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.ம.மு.க.,வினர் புகார் மனு அளித்தனர். தேர்தல் அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர். காலை, 9:30 மணிக்கு மேல், மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதனால், ஒரு மணி நேரம், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE