புதுடில்லி:பஞ்சாப் சிறையில் உள்ள, எம்.எல்.ஏ., முக்தார் அன்சாரி, விசாரணைக்கு ஆஜராகும்போது, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, அவர் மனைவி தாக்கல் செய்த மனு, நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ., முக்தார் அன்சாரி மீது, ஆட்கடத்தல், கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர், மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, பஞ்சாப் சிறையில் இரண்டு ஆண்டுகளாக அடைக்கப்பட்டு உள்ளார். இவரை, உ.பி., போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து, உ.பி., போலீசார், நேற்று, பஞ்சாபில் இருந்து, முக்தார் அன்சாரியை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். இந்நிலையில், முக்தார் அன்சாரியின் மனைவி, அப்ஷன், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:என் கணவர், முக்தார் அன்சாரிக்கு, ஆளும் கட்சியில் ஏராளமான எதிரிகள் உள்ளனர். அவர் எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து, பல முறை உயிர் பிழைத்துள்ளார். அதனால், அவருக்கு சிறையில் உரிய பாதுகாப்பு வழங்க, உ.பி., அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகி மீண்டும் சிறைக்கு திரும்பும் வரை, போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு தர வேண்டும். அவற்றை, 'வீடியோ'வில் பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு, தாதா விகாஸ் துபேவை, போலீசார், 'என்கவுண்டரில்' சுட்டுக் கொன்றனர். அதே கதி, என் கணவருக்கும் ஏற்படும் என, ஊடகங்கள் கூறுகின்றன. அதனால், என் கணவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நாளை, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
பஞ்சாப் டூ பாண்டா
பஞ்சாப் போலீசார், நேற்று, முக்தார் அன்சாரியை முறைப்படி, உ.பி., போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர், ரூப் நகர் சிறையில் இருந்து, 'ஆம்புலன்ஸ்' வண்டியில் ஏற்றப்பட்டு, பலத்த பாதுகாப்புடன், உ.பி.,க்கு கொண்டு வரப்பட்டார். கலவர தடுப்பு வாகனமான 'வஜ்ரா' உட்பட போலீஸ் வாகனங்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தன. 14 மணி நேர பயணத்திற்குப் பின், முக்தார் அன்சாரி, உ.பி.,யின், பாண்டா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இருக்கும் பகுதிக்கு, இதர சிறைக் கைதிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE