கர்நாடக மாநில போக்குவரத்து ஊழியர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அம்மாநில அரசு பஸ்கள், தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை.
'ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்' என்பன உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடக மாநில போக்குவரத்து ஊழியர்கள் சார்பில், கடந்தாண்டு, டிசம்பரில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
ஊழியர் சங்க பிரதிநிதி களுடன், அரசு சார்பில் பேச்சு நடத்தப்பட்டது. அதில், போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்ற கோரிக்கை தவிர, மற்ற ஒன்பது கோரிக்கை களை மூன்று மாதத்துக்குள் நிறைவேற்றுவதாக, அரசு வாக்குறுதி அளித்தது. அதனால், வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், வாக்குறுதியை அரசு நிறைவேற்றாததால், நேற்றில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், கர்நாடக மாநிலத்தில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. அதேபோல், அங்கிருந்து, தமிழக எல்லையான ஓசூர் வழியாக செல்லும், 80க்கும் மேற்பட்ட கர்நாடக மாநில அரசு பஸ்கள், நேற்று வரவில்லை.ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் தொழிலாளர்கள், மருத்துவ மனைக்கு செல்லும் நோயாளிகள், மாணவ - மாணவியர் என, பல தரப்பினரும் சிரமப் பட்டனர். தமிழக அரசு மற்றும் தனியார் பஸ்கள் மட்டும், கர்நாடக மாநிலத்துக்கு சென்று வந்தன.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE