சென்னை:அ.தி.மு.க.,வினர் கொடுத்த டோக்கனுடன், ரேஷன் கடைகளுக்கு சென்று, பொதுமக்கள், 1,500 ரூபாய் கேட்பதால், மாதவரம் தொகுதியில் சலசலப்பு ஏற்பட்டுஉள்ளது.
ரூ.1,500
சென்னை, மாதவரம் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் மூர்த்தியும், தி.மு.க., சார்பில் சுதர்சனமும், வேட்பாளராக களம்இறங்கினர்.இறுதிக்கட்ட பிரசாரத்தின் போது, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், புழல், சோழவரம் ஊராட்சி ஒன்றியங்களில், வார்டு வாரியாக, வீடு, வீடாக சென்றனர்.'இரட்டை இலைக்கு ஓட்டளிப்பீர்' என்ற வாசகம் அச்சிடப்பட்ட சிறிய டோக்கனை வழங்கியவர்கள், 'தேர்தல் முடிந்து, ரேஷன் கடைகளுக்கு சென்றால், 1,500 ரூபாய் வழங்கப்படும்' என, கூறியுள்ளனர்.
ஏமாற்றம்
ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், ரேஷன் கடைகள் வழக்கம் போல திறக்கப்பட்டன. நேற்று அங்கு சென்ற பலர், பொருட்கள் வாங்குவது போல, ரேஷன் ஊழியர்களிடம் டோக்கனை நைசாக கொடுத்து, 1,500 ரூபாய் தரும்படி கேட்டனர்.இந்த டோக்கனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த ரேஷன் ஊழியர்கள், 'பணம் தர முடியாது' என்றனர். இதனால், ரேஷன் ஊழியர்களிடம், பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு ரேஷன் ஊழியர்கள், 'உங்களுக்கு டோக்கன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு சென்று, பணம் வாங்கி கொள்ளுங்கள்' எனக்கூறி, விரட்டாத குறையாக அனுப்பினர். டோக்கனுடன் சென்ற பொதுமக்கள், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE