விழுப்புரம்,:வீட்டு வசதி வாரியத்திற்கு நிலம் வழங்கியதற்கு, 39.36 கோடி ரூபாய் இழப்பீடு வழங்காததால், விழுப்புரம் கலெக்டர் அலுவலக பொருட்களை, 'ஜப்தி' செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால், பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியைச் சேர்ந்தவர், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம். இவருக்கு சொந்தமாக, கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள, 6 ஏக்கர், 75 சென்ட் இடத்தை, 1991ல், அரசு ஆர்ஜிதம் செய்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு வழங்கியது. இதில், சண்முகம் மகன் சிவானந்தம் பங்கு, 1 ஏக்கர், 50 சென்ட் இடத்திற்கு, 4 லட்சத்து, 55 ஆயிரத்து, 332 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த தொகை, சந்தை மதிப்பை விட குறைவாக இருப்பதாக கூறி, விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில், சிவானந்தம் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த, 2018ல் சதுர அடி, 500 ரூபாய் என கணக்கிட்டு, 1991 முதல் வட்டியுடன் சேர்த்து, இழப்பீட்டு தொகையாக, 39 கோடியே, 36 லட்சத்து, 59 ஆயிரத்து, 337 ரூபாய் வழங்குமாறு, நீதிமன்றம் உத்தர விட்டது. பணத்தை வழங்காமல் தாமதம் செய்ததால், கட்டளை நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இழப்பீட்டு தொகையை மூன்று மாதத்திற்குள், நீதிமன்றத்தில் டிபாசிட் செய்ய, கடந்தாண்டு உத்தரவிடப்பட்டது. இந்த தொகையை வழங்காததால், விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி அலுவலகங்களில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்யுமாறு, மார்ச், 24ம் தேதி, நீதிபதி மோனிகா உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று காலை, 11.00 மணிக்கு நீதிமன்ற ஊழியர்கள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன் பேச்சு நடத்தினார். வீட்டுவசதி வாரிய அதிகாரிகளும் அங்கு வரவழைக்கப்பட்டு, பேச்சு நடத்தினர். இழப்பீட்டு தொகையை வழங்க அவகாசம் கோரப்பட்டது. இதற்கு மனுதாரர் ஒப்புக்கொண்டதன்படி, நீதிமன்ற ஊழியர்கள், ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE