பிரதமர் மோடி:
குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும், வேளாண் சட்டங்கள் குறித்தும், தவறான தகவல்கள் மக்களிடம் பரப்பப்படுகின்றன. விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்படும்; சிலரின் குடியுரிமை பறிக்கப்படும்; இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று சில தனிநபர்களும், அமைப்புகளும் தவறாக பிரசாரம் செய்கின்றன; இதற்கு பின்னணியில் திட்டமிட்ட அரசியல் இருக்கிறது.
'டவுட்' தனபாலு: பா.ஜ., என்ற கட்சி, வெளிச்சத்துக்கு வந்த நாள் முதல், இப்படித் தான் சொல்கின்றனர். 'நாட்டை துண்டாடி விடுவர்; பிற மத வழிபாட்டுத் தலங்களை இடித்து விடுவர்; ஹிந்து நாடு என அறிவித்து விடுவர்' என, தவறாக பிரசாரம் செய்கின்றனர். எனினும், கட்சி துவங்கி, 41 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவ்வாறு நடக்கவில்லை. எனவே, எதிர்க்கட்சிகளின் பிரசாரம், அரசியல் காரணங்களுக்கானது என்பதில், யாருக்கும், 'டவுட்டே' இருக்க முடியாது!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தமிழகம் முழுதும் மக்கள் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். இதன் முடிவு, மே 2ல் சிறப்பாக இருக்கும்; இது உறுதி. ஆளும் கட்சிக்கு எதிர்ப்பலை உள்ளதை உணர்கிறேன். தேர்தல் கமிஷன் செயல்பாடு திருப்தி, அதிருப்தி என்று சொல்ல முடியாது.
'டவுட்' தனபாலு: தமிழக மக்கள் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர் என்பது சரி தான். காலை, 9:00 மணிக்கு, நீங்கள் இவ்வாறு சொன்னது உண்மை தான் என்பது போல, பகல், 3:00 மணிக்கே, பெரும்பாலான மையங்களில், 50 சதவீத ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இது, மிகப் பெரிய சாதனை தான். அதற்காக, ஆளும் அரசுக்கு எதிராக அலை வீசுகிறது என, சொல்வது தான் சரியில்லை. இவ்வாறு கூறியதன் மூலம், மீதமுள்ள ஓட்டுகளை, தி.மு.க.,வுக்கு விழ முயற்சித்தீர்களோ என்ற, 'டவுட்'வருகிறது.
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தேர்தல் நடத்தும் முறைகளில் மாற்றம் வேண்டும். 'டிஜிட்டல் இந்தியா' என கூறிக் கொண்டால் மட்டும் போதாது. ஓட்டளிக்கும் முறையை இயந்திரமயமாக மாற்றி விட்ட நிலையில், தொழில்நுட்பத்தை கையாண்டு, முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏன்? அமெரிக்கா போல, ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், உடனடியாக எண்ணப்பட்டு முடிவு தெரிவிக்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் தான், ஓட்டுப்பதிவு முடிந்ததும், முடிவை அறிவிக்கத் துவங்குகின்றனர். ஆனால், நம் நாட்டில், ஒரு மாநிலத்தில் ஒரே கட்டம்; பிற மாநிலங்களில் பல கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறதே... ஒரு பகுதியின் முடிவை, உடனடியாக அறிவித்து விட்டால், அது, பிற பகுதி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை பாதிக்காதோ... அதனால் தான், நம் நாட்டில் தாமதமாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இது தான் அருமையான, 'சிஸ்டம்' என்பதில், யாருக்கும், 'டவுட்டே' வராது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE