புதுடில்லி ;“கொரோனா தடுப்பு வழிமுறைகளான, முக கவசம் அணிவது, கிருமி நாசினியால் கைகளை கழுவுதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தவேண்டும்,” என, நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேட்டுக் கொண்டார்.
நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, தொடர்ந்து, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், உலக சுகாதார தினமான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டர்' வாயிலாக பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:நம் பூமியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, இரவு பகல் பாராமல் பணியாற்றி வருவோரை பாராட்டி, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள், இந்த உலக சுகாதார தினம்.சுகாதாரத் துறையில், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு நாம் அளிக்கும் ஆதரவுக்கான உறுதிப் பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் நாளாகும்.
இந்நாளில், கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். முக கவசம் அணிவது, கிருமி நாசினியால் கைகளை கழுவுதல் உள்ளிட்ட விதிமுறைகளை நாம் முறையாக பின்பற்றவேண்டும்.இதேபோல், நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான முயற்சிகளையும் நாம் எடுக்கவேண்டும்.நாட்டு மக்கள், தரமான, அதே நேரத்தில் மலிவான செலவில் மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில், 'ஆயுஷ்மான் பாரத்' உள்ளிட்ட திட்டங்கள், மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டன.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
சீக்கிய குரு தேஜ்பகதுாரின், 400வது ஆண்டு பிறந்த நாளை ஒட்டி, ஓராண்டுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, பிரதமர் மோடி தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், பஞ்சாப் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான அமரீந்தர் சிங், அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு தலைவர், கோபிந்த் சிங் லோங்கேவால், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று நடக்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE