கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது: ஐகோர்ட்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
சென்னை:'அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை ஏற்க இயலாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், அது குறித்து, அரசும், பல்கலை மானிய குழுவும் ஆலோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, கல்லுாரிகளில் இறுதி ஆண்டு இறுதி தேர்வை தவிர்த்து, மற்ற தேர்வுகளை ரத்து செய்து, உயர் கல்வித்துறை உத்தரவிட்டது.

சென்னை:'அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை ஏற்க இயலாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், அது குறித்து, அரசும், பல்கலை மானிய குழுவும் ஆலோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, கல்லுாரிகளில் இறுதி ஆண்டு இறுதி தேர்வை தவிர்த்து, மற்ற தேர்வுகளை ரத்து செய்து, உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. 'அரியர்' தேர்வுக்கு கட்டணம் செலுத்தி இருந்தால், அதையும் ரத்து செய்தது. இந்த உத்தரவு, 2020 ஆகஸ்டில் பிறப்பிக்கப்பட்டது.அரசாணையை ரத்து செய்யவும், அரியர் தேர்வு களை நடத்தவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தன.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''அரியர் தேர்வுகள் ரத்து, கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு தான், யு.ஜி.சி., வழிமுறைகளின்படி ரத்து செய்யப்பட்டது. ''பொறியியல், மருத்துவம், சட்டம், கட்டடக்கலை, ஆசிரியர் படிப்புகளை கட்டுக்குள் வைத்திருக்கும் அமைப்புகள், அரியர் தேர்வுகள் ரத்தை ஏற்கவில்லை. அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் நேரடி தேர்வு நடத்தப்பட்டது,'' என்றார்.

யு.ஜி.சி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தேர்வு நடத்த வேண்டாம் என, பல்கலை மானிய குழு தெரிவிக்கவில்லை' என்றார்.இதையடுத்து, தலைமை நீதிபதி தலையிலான அமர்வு, 'அரியர் தேர்வு ரத்து, தவறான அறிகுறியை கொடுத்து விடும். கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்பதை ஏற்க இயலாது.'ஏதாவது ஒரு வழியில் தேர்வு நடத்தப்பட வேண்டும். நாங்கள், இந்த துறையில் நிபுணர்கள் அல்ல. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது. யு.ஜி.சி.,யும், தமிழக அரசும் சேர்ந்து ஆலோசிக்க வேண்டும்' என, தெரிவித்தது.

பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:தமிழகம் முழுதும் பல்கலை, கல்லுாரிகள் வாரியாக, அரியர் தேர்வுக்கு எத்தனை மாணவர்கள் விண்ணப்பித்தனர்; எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர் என்ற விபரங்களை, தாக்கல் செய்ய வேண்டும். இதற்கிடையில், யு.ஜி.சி., மற்றும் தமிழக அரசு அதிகாரிகள், எந்த வழியில் தேர்வு நடத்தலாம் என்பதை ஆலோசித்து, பரிந்துரைக்க வேண்டும்.

உயர் படிப்பில் சேர்வதற்கு தகுதியில்லாத மாணவர்களை, தகுதி பெற்றவர்களாக சான்றிதழ் அளிக்க முடியாது.கல்வி முறையின் புனிதத்தில் சமரசம் மேற்கொள்ளாமல், மாணவர்களின் நலன் கருதி, அரசு மற்றும் யு.ஜி.சி., கலந்து ஆலோசிக்க வேண்டும். விசாரணை, வரும், 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X