சென்னை:'தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக, எதையும் பேசவில்லை' என, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள, இடைக்கால பதிலில், உதயநிதி தெரிவித்துள்ளார்.
தி.மு.க., இளைஞர் அணி தலைவர் உதயநிதி, மார்ச், 31ல் தாராபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது, 'மூத்த தலைவர்களை ஓரம்கட்டி விட்டு, நான் குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்ததாக, பிரதமர் பேசி உள்ளார். 'நோட்டீஸ்''குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி தான், மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு ஆகியோரை ஓரம்கட்டி விட்டு, குறுக்கு வழியில் முன்னுக்கு வந்தார்.
'மத்திய அமைச்சர்களாக இருந்த, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர், மோடியின் தொல்லை தாங்காமல் இறந்து விட்டனர்' என்று, பேசினார். 'இது, தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது' என, பா.ஜ., தரப்பில், தேர்தல் கமிஷனில், புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, நேற்று மாலை, 5:00 மணிக்குள் பதில் அளிக்கும்படி, உதயநிதிக்கு தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியது.
உதயநிதி அனுப்பியுள்ள இடைக்கால பதில்:என் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறேன். என் பேச்சின், இரு வரிகளை மட்டும் குறிப்பிட்டு, அவதுாறாக பேசியதாக, புகார் கூறப்பட்டு உள்ளது. என் பேச்சின் முழு வடிவத்தையும் படித்து பார்த்தால், நான் பேசியதன் அர்த்தம் புரியும். பா.ஜ., தரப்பில், 2ம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் நகலை, எனக்கு வழங்க வேண்டும். நான் தேர்தல் நடத்தை விதிகள், எதையும் மீறவில்லை.
குறுக்கு வழி
பிரதமர் மோடி, மார்ச், 30ல் தாராபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது, தி.மு.க., தலைவர் களை ஓரம்கட்டி விட்டு, நான் குறுக்கு வழியில் வந்ததாக தெரிவித்தார். அதற்கு மறுநாள், நான் பதில் அளித்தேன். நான் தமிழில் கூறிய வார்த்தைகள், நோட்டீசில் தவறாக கூறப்பட்டுள்ளன. நான் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேசவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவித்தேன். என் பேச்சை முழுமையாக கேட்டால், அதை அறிய முடியும்.
மறைந்த சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி மீது, எனக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. இது தொடர்பாக, ஏப்., 2ல், சிங்காநல்லுார் பிரசாரத்தில், விளக்கம் அளித்தேன். என் பேச்சில் உள்நோக்கம் எதுவும் கிடையாது. இடைக்கால பதிலை ஏற்க வேண்டும். புகார் மனு நகல் கிடைத்ததும், விரிவான பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE