புதுடில்லி:''மாணவர்களுக்கு பொது தேர்வு ஒன்றும், இறுதி கட்ட வாழ்க்கை இல்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
'பரிக் ஷா பே சர்ச்சா' என்ற பெயரில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுடன், 2018 முதல், பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். பெரிய இழப்புகொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு, மாணவர்களுடனான கலந்துரையாடல், 'ஆன்லைன்' வழியாக நடந்தது. 81 நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்கள், அவர்களது ஆசிரியர்கள், பெற்றோர் என, 14 லட்சம் பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:
'இந்நிகழ்ச்சி ஆன்லைன் வழியில் நடப்பது, இது தான் முதல்முறை. கடந்த ஒரு ஆண்டாக, கொரோனாவுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்களை நேரடியாக சந்திக்காததால், உங்களின் உற்சாகத்தை பெற முடியாதது, எனக்கு பெரிய இழப்பு. மாணவர்களுக்கு தேர்வுகளை பார்த்து அச்சம் ஏற்படுகிறது. இதற்கு சில காரணங்கள் உள்ளன. தேர்வுகள் தான் அனைத்தும் என்ற சூழ்நிலை, மாணவர்களை சுற்றி உருவாக்கப் பட்டு உள்ளது. மாணவர்கள், மிகப்பெரிய நிகழ்வு, மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க போவது போன்ற சூழ்நிலையை, பள்ளிகள், பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள் உருவாக்குகின்றனர்.
நான் அவர்களிடம் ஒன்றை கூற விரும்புகிறேன். குறிப்பாக, பெற்றோர் செய்வது பெரிய தவறு என, நினைக்கிறேன். குழந்தைகளிடம், நாம் தேவைக்கு அதிகமாகவே கவனமாக இருந்து, அதிகமாக சிந்திக்க துவங்கிவிட்டோம். தேர்வை கண்டு, மாணவர்கள் சிறிதும் பயப்படக் கூடாது. மன அழுத்தம் இன்றி, தேர்வை எதிர்கொள்ள வேண்டும். நெருக்கடியை தவிர்க்க, தேர்வுக்கான நேரத்தை சரிபாதியாக எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில், கடினமான கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். அதன் பின், எளிதான, நன்கு தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள், துாண்டு கோலாக இருக்க வேண்டும். அவர்களின் மன அழுத்தத்தை போக்க, வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பெற்றோரும், மாணவர்களுக்கு ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்தால் தான், அவர்களின் தன்னம்பிக்கை வளரும். மாணவர்களுக்கு பொது தேர்வு ஒன்றும், இறுதி கட்ட வாழ்க்கை இல்லை. வாழ்க்கை மிக நீளமானது. தேர்வு என்பது சிறிய நிறுத்தம் தான். மாணவர்களிடம் நாம் அழுத்தத்தை உருவாக்கக்கூடாது. தற்போதைய பெற்றோர், தேர்வு முடிவுகளை வைத்து, குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள் என முடிவெடுக்கின்றனர். இது தவறு. குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு, மோடி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE