புதுடில்லி : கடந்த, 2012 பிப்ரவரியில், இரண்டு இந்திய மீனவர்களை, இத்தாலி மாலுமிகள் சுட்டுக் கொன்ற வழக்கை முடித்து வைக்க கோரிய மத்திய அரசின் மனு, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, உச்ச நீதிமன்றம் நேற்று கூறியது.
கடந்த, 2012 பிப்ரவரியில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே ஐரோப்பிய நாடான, இத்தாலியை சேர்ந்த, 'எம்வி என்ரிக்கா லெக்ஸி' என்ற எண்ணெய் கப்பல் வந்தது.மீனவர்களை கடல் கொள்ளையர் என, தவறாக நினைத்து, இத்தாலிய கப்பலில் இருந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இரண்டு இந்திய மீனவர்கள் பலியாயினர்.
![]()
|
உரிய இழப்பீடு
இந்த வழக்கில், இத்தாலிய கப்பலைச் சேர்ந்த மாலுமிகள், சால்வடோர் கிரோனி மற்றும் மாசிமிலியானோ லாடோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட இருவருக்கும், 2014 மற்றும் 2016 காலகட்டத்தில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இருவரும் தங்கள் நாட்டுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில், இவர்கள் மீதான வழக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை முடித்து வைக்குமாறு, மத்திய அரசு, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினரை விசாரிக்காமல், வழக்கை முடித்து வைக்க முடியாது என்று கூறியது. மேலும், மீனவர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
உத்தரவு
உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டு விட்டதாகவும், அவர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், இந்த வழக்கு இந்தியா - இத்தாலி அரசு இடையேயான விவகாரம் என்பதால், அவசர வழக்காக விசாரிக்க கோரினர்.இதையடுத்து, 'இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE