சென்னை:கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு துறை செயலர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடி உள்ளது. தேர்தல் முடிந்ததும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு முடிந்தது.நேற்று தலைமை செயலகத்தில் தலைமை செயலர் தலைமையில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் டி.ஜி.பி. திரிபாதி, நிதித்துறை செயலர் கிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, தொழில்துறை செயலர் முருகானந்தம், பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன், பொதுத்துறை முதன்மை செயலர் மணிவாசன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத், பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் ஜெகநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக அரசு சார்பில் தலைமை செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.அப்போது தமிழக அரசு சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பிரதமருக்கு தெரிவிக்கப்பட உள்ளன. பின் பிரதமர் கூறும் ஆலோசனைகளை ஏற்று அதற்கேற்ப நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE