பொள்ளாச்சி : பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், 77.34 ஓட்டு சதவீதம் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில், தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என, கட்சியினர் கணக்கு போட துவங்கி விட்டனர்.
பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், கடந்த, 2016ம் ஆண்டு மொத்தம் உள்ள வாக்காளர்கள், இரண்டு லட்சத்து, 16 ஆயிரத்து, 972 பேர் உள்ளனர். அதில், ஒரு லட்சத்து, 67ஆயிரத்து, 746 பேர் ஓட்டு பதிவு செய்துள்ளனர். மொத்தம், 77.70 ஓட்டு சதவீதம் பதிவாகி இருந்தது.நடப்பாண்டில், ஆண்கள், ஒரு லட்சத்து, 88ஆயிரத்து, 52 பேர், பெண்கள், ஒரு லட்சத்து, 18 ஆயிரத்து, 159, மற்றவர்கள், 38 என மொத்தம், இரண்டு லட்சத்து, 27ஆயிரத்து, 049 பேர் உள்ளனர். நேற்று நடந்த தேர்தலில் ஆண்கள், 86 ஆயிரத்து,857, பெண்கள், 88,734, மற்றவர்கள், 5 என மொத்தம், ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 596 பேர் ஓட்டு அளித்துள்ளனர். மொத்தம், 77.34 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி தொகுதியில், 318 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில், 77.34 ஓட்டு சதவீதம் பதிவாகியுள்ளது. ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
கட்சியினர் ஆலோசனை:
பொள்ளாச்சி தொகுதியில், ஓட்டு சதவீதத்தை கணக்கு போட்டு யாருக்கு வெற்றி இருக்கும் என, கட்சியினர் ஆலோசிக்க ஆரம்பித்து விட்டனர். இதற்காக கடந்த, 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், எம்.பி., தேர்தலில் பதிவான ஓட்டுகள்; தற்போது பதிவாகி உள்ள ஓட்டுகள் என கணக்கிட்டு யாருக்கு வெற்றி கிடைக்கும் என, கணக்குப்போட துவங்கி விட்டனர்.
இரண்டு திராவிட கட்சிகளும், ஓட்டு எவ்வளவு கிடைக்கும்; எந்த கட்சி ஓட்டை பிரிக்கிறது என்பதெல்லாம் யோசிக்க துவங்கியுள்ளனர். மேலும், நகரப்பகுதியை விட கிராமப்பகுதிகளில் ஓட்டு சதவீதம் நன்றாகவே உள்ளது. இதையும் கணக்கிட்டு வருகின்றனர். என்னதான் கணக்கு போட்டாலும் மக்கள் மனசுல யாரு இருக்காங்கன்னு பார்க்க வேண்டுமென்றால் மே 2ம் தேதி வரை காத்திருப்போம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE