திருப்பூர் : முதியோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தனிமைப்படுத்தப்பட்டோர் என, பலருக்கும் தபால் ஓட்டு வசதியை, தேர்தல் கமிஷன் ஏற்படுத்தியது.
ஆனாலும், தபால் ஓட்டு பெறாதவர்கள், மிகுந்த ஆர்வமுடன், ஓட்டுச்சாவடிக்கு நேரில் வந்து, தங்கள் ஓட்டினை பதிவு செய்தனர். ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு வயதோ, உடல் நிலையோ ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்தனர்.நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், திருப்பூர் வடக்கு தொகுதியில், பிஷப் பள்ளி ஓட்டுச்சாவடியில், 83 வயதான அப்துல் ஜபார் என்பவர், நடக்க முடியாத நிலையிலும், மகனின் உதவியுடன் வந்து, ஜனநாயக கடமை ஆற்றினார்.
கொங்கு மெட்ரிக் பள்ளி ஓட்டுச்சாவடியில்,ஸ்ரீநகரைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி மாணிக்கம்மாள், மகனின் துணையுடன் வந்து ஓட்டுப்பதிவு செய்தார்.அவர், 'நேரில் வந்து ஓட்டளிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தால், தபால் ஓட்டு வாங்கவில்லை' என, கூறி, அனைவரையும் நெகிழவைத்துவிட்டார்.
திருப்பூர் தெற்கு தொகுதி, கே.எஸ்.சி., பள்ளி ஓட்டுச்சாவடியில், 80 வயதை கடந்த ருக்குமணி என்கிற மூதாட்டி, உறவினர்கள் உதவியுடன் வந்து, ஓட்டளித்தார்.காங்கயம், அவிநாசி, பல்லடம், தாராபுரம் ஓட்டுச்சாவடிகளில், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மறக்காமல் ஜனநாயக கடமையாற்றியதை பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE