சிங்கம்புணரி : சிங்கம்புணரி, எஸ்.புதுார் பகுதியில் ஓட்டுச் சாவடிகளிலிருந்து பதிவான ஓட்டு இயந்திரங்களை எடுத்துச் செல்ல தாமதமானதால் அலுவலர்கள் இரவு முழுவதும் பள்ளிகளிலேயே தங்கி சிரமப்பட்டனர்.
திருப்புத்தூர் சட்டசபைத் தொகுதியில் ஏப். 6ல் நடந்த வாக்குப் பதிவில் 72.01 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. இம்முறை கொரோனா நோயாளிகள் தனியாக வாக்களிக்கும் வகையில் இரவு 7:00 மணி வரை ஓட்டுப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.இதனால் ஓட்டு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தாமதமானது. ஓட்டு இயந்திரங்களை கொண்டு செல்ல 15 ஓட்டுச் சாவடிகளுக்கு ஒரு வாகனம் வீதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் அலுவலர்கள் இறுதிக்கட்ட படிவங்கள் சிலவற்றை பூர்த்தி செய்யாமல் வைத்திருந்ததால் ஓட்டு இயந்திரங்களை பெற வந்தவர்கள் அந்த படிவங்களை காத்திருந்து நிரப்பி பெற்ற பிறகே இயந்திரங்களை ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
இதனால் பல ஓட்டுச்சாவடிகளில் நேற்று காலையில் தான் வாகனங்கள் வந்தது. குறிப்பாக வாராப்பூர் உள்ளிட்ட பகுதி ஓட்டுச்சாவடிகளுக்கு நேற்று காலை 7:30 மணிக்கே வாகனங்கள் வந்தன.அதுவரை தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அலுவலர்கள் அரசியல் கட்சிகளின் முகவர்கள் அங்கேயே இரவு முழுவதும் தங்கி ஓட்டு இயந்திரங்களை கண்காணித்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE