பரமக்குடி :" பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் உள்ள முதுகுளத்தூர் மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாமல் இருளில் வாகன ஓட்டிகள் தவிக்கும் நிலை உள்ளது .
பரமக்குடி ஐந்து முனை ரோடு ராமநாதபுரம், இளையான்குடி, உழவர் சந்தை பகுதிக்கு செல்லும் பிரிவுகளாக உள்ளது. இப்பகுதியில் முதுகுளத்தூர் ரோட்டில் ரயில்வே லெவல் கிராசிங் இருந்தது.நெரிசலை தவிர்க்க போலீஸ் ஸ்டேஷன் தொடங்கி பொன்னையாபுரம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து பாலம் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளை கடந்து உள்ளது. இங்கு ஆரம்பக்கட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டது.
பாலத்திற்கு மேல் பகுதி மற்றும் கீழ் புறங்களிலும் அதிகப்படியான வெளிச்சம் இருந்தது. ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மின்விளக்குகள் ஒவ்வொன்றாக எரியாமல் இருக்கிறது. இதனால் பாலம் வழியாக செல்லும் பெண்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் பாலம் வளைவுகள் அதிகம் கொண்டதாக உள்ளதால் எதிரில் வரும் வாகன ஓட்டிகள் இருளில் தவிக்கின்றனர். இத்துடன் பாலத்தின் கீழ் பகுதியில் ரயில்வே டிராக் கடந்து செல்ல வசதியாக சப்வே அமைக்கப்பட்டுள்ளது.
இங்கும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டும் எரியாததால் அப்பகுதியே இருளில் இருக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலம், ஐந்து முனை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் முறையாக மின் விளக்குகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE