கொரோனா அலைகள்| Dinamalar

கொரோனா அலைகள்

Added : ஏப் 08, 2021
Share
கொரோனா உலகெங்கும் பரவி ஓர் ஆண்டுக்கும் மேலாயிற்று, நம் நாட்டில் ஊரடங்கு அமல் படுத்தி ஒரு வருடம் முடிந்தது. எல்லாம் முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் வேளையில் உலகில் ஆங்காங்கே கொரோனாவின் இரண்டாவது அலை வந்து விட்டது. நம் நாட்டிலும் இதை நம்மால் உணர முடிகிறது. தினமும் 10 ஆயிரம் அளவில் பதிவான பாதிப்பு எண்ணிக்கை, தற்போது ஒரு லட்சம் வரை உயர்ந்திருப்பதை நாம்
 கொரோனா அலைகள்

கொரோனா உலகெங்கும் பரவி ஓர் ஆண்டுக்கும் மேலாயிற்று, நம் நாட்டில் ஊரடங்கு அமல் படுத்தி ஒரு வருடம் முடிந்தது. எல்லாம் முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் வேளையில் உலகில் ஆங்காங்கே கொரோனாவின் இரண்டாவது அலை வந்து விட்டது.

நம் நாட்டிலும் இதை நம்மால் உணர முடிகிறது. தினமும் 10 ஆயிரம் அளவில் பதிவான பாதிப்பு எண்ணிக்கை, தற்போது ஒரு லட்சம் வரை உயர்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம். கடலில் ஓர் அலை உயர எழும்பி, பிறகு தரைமட்டத்திற்கு வந்து, மீண்டும் புதிதாக இன்னொரு அலை உருவாகி உயரஎழும்பினால், அதுவே இரண்டாம் அலை.நம் கதை வேறு. தினமும் ஒரு லட்சம் வீதம் பதிவான கேசுகள் பத்தாயிரத்திற்கு இறங்கி, மீண்டும் வேகமெடுத்து வருவதை முதல் அலையின் தொடர்ச்சி என்றே சொல்ல வேண்டும்.

இது போல் இன்னும் பல அலைகள் வரலாம். நாம் இரண்டாம் அலையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் இதே வேளையில், பல மேலை நாடுகளில் மூன்றாம் அலை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள்.


உண்மை என்ன

நம் விஞ்ஞானிகளும், தொற்று நோய் நிபுணர்களும், ஆரம்பம் முதலே சொல்லி வருகிறார்கள் - "இந்த வைரஸ் அழியாது, நம்மோடு தான் இருக்கப்போகிறது. இதோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்" என்று. ஜலதோஷ வைரஸ் போல், புளூ வைரஸ் போல், டெங்கு, பன்றி காய்ச்சல் போல், அவ்வப்போது பருவநிலைக்கு ஏற்ப வந்து போய்க் கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு முறையும் ஓர் அலையாக எண்ணிக் கொண்டிருக்க முடியாது.வீரியமான தொற்று நோய்களைத் தடுப்பதற்கு நம்பகமான தீர்வு - தடுப்பூசி தான். பொதுவாக, தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு தடுப்பூசி தயாரிப்பதற்கு ஐந்து முதல் பத்து வருடங்கள் ஆகும். ஆனால் நிலைமையின் கடுமையை உணர்ந்து, இரவு பகலாகப் பாடுபட்டு, உலகெங்கிலும் பல விஞ்ஞானிகள் உழைத்த உழைப்பின் பலனாக, சில தடுப்பூசிகள் விரைவில் சந்தைக்கு வந்துவிட்டன. நம் நாட்டிலும், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் வந்துவிட்டன.எந்த ஊசியிலும் சில பக்க விளைவுகள் வரத்தான் செய்யும். அவற்றை நாம் பெரிதுபடுத்த வேண்டாம்.


நம் நாட்டில் நிலை என்ன

நம் நாட்டின் ஜனத்தொகை 138கோடி. இவர்களில் பாதிப் பேர்களுக்காவது ஊசி போட்டால்தான் மந்தை எதிர்ப்பு சக்தி ( Herd immunity) உருவாகும். நம் அரசு முதலில் 30 கோடி பேர்களுக்கு ஊசி போட திட்டமிட்டது. ஆனால், இந்த மூன்று மாதங்களில் சுமார் 6 கோடி பேர்களுக்குத்தான் ஊசி போட முடிந்தது .

அதிலும், பாதிப்பேருக்கு மேல் ஒரு ஊசியோடு நிறுத்திக்கொண்டு, இரண்டாம் ஊசி போட வரவில்லை!முதலில் சுகாதாரத் துறையின் முன்களப் பணியாளர்களுக்கு ஊசி போட்டார்கள். பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்போதுதான் 45 வயது முதல் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலையை மாற்றி, தகுதியுள்ள எல்லாரும் ஊசி போட்டுக் கொள்ளலாம் என்று விதிகள் தளர்த்தப்பட வேண்டும்.

இந்த ஊசியின் பலன் சுமார் 10 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை மட்டுமே நீடிக்கும். அப்படியானால் வருடத்திற்கு ஒரு முறை ஊசி போட்டுக் கொண்டால் தான் முழு பிரயோஜனம்.இரண்டு ஊசிகளுக்குப் பதிலாக ஒரு ஊசி மட்டுமே போடும் மருந்து ஒன்று விரைவில் வர இருக்கிறது. போலியோ சொட்டுமருந்து போல் மூக்கில் போடும் சொட்டுமருந்தும் அடுத்து வரப்போகிறது. இவை எல்லாம் வரவேண்டும் - மக்களில் 50 சதவீதம் பேராவது தடுப்பூசி எடுக்க வேண்டும். அதற்கு பிறகுதான் மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகும்.அது வரை என்ன செய்வது ?மந்தை எதிர்ப்பு சக்தி வருவதற்கு இரண்டு வழிகள் - ஒன்று தடுப்பூசி. இரண்டு - கொரோனாவால் பாதித்தவர்கள் - நேரடியாகவோ மறைமுகமாகவோ - அவர்கள் உடலில் இயற்கையாகவே உருவாகும் எதிர்ப்பு சக்தி.


மாற்று வழிகள் என்ன

நம் நாட்டில் இதுவரை 1கோடி 25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.மொத்தம் 25 கோடி பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில் சுமார் 45 சதவீதம் பேர்களுக்கு எதிர்ப்பு சக்தி ஏற்கனவே வந்து விட்டதாகத் தெரிந்தது. எப்படிக் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் சுமார் 60 கோடி பேர்களுக்கு மந்தை எதிர்ப்பு சக்தி வந்து விட்டதாகவே தெரிகிறது. ஆகவே, இன்னும் சில மாதங்களில் இயற்கையாகவோ, செயற்கையாகவோ மந்தை எதிர்ப்பு சக்தி கணிசமாக உருவாகி, கொரோனா அடியோடு மறைந்து விடும் என்று நம்பலாம்.


புதிய, மரபணு மாறிய வைரஸ்கள்

சில நாட்களுக்கு முன், இங்கிலாந்தில் மரபணு மாறிய புதிய வைரஸ் உருவாகி விட்டதாக செய்தி பரவி எல்லாரும் பயந்து விட்டார்கள். அதற்குள் பிரேசிலில் இன்னொரு வகையான வைரஸ், எகிப்தில் மற்றொரு வகையான வைரஸ், தென்னாப்பிரிக்காவில் வேறு வகையான வைரஸ் என்றெல்லாம் புதிது புதிதாக பூதம் கிளம்பியது. தற்போது நம் நாட்டிலும், "இரட்டை மரபணு மாற்றம் அடைந்த புது வைரஸ்" பரவி உள்ளதாக செய்தி பரவி எல்லோருடைய வயிற்றிலும் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.

"யாரும் பயப்படவேண்டாம்! இதுவும் கடந்துபோகும்" மரபணு மாற்றம் ஏன் ஏற்படுகிறது? இந்த வைரஸ் நம் உடலுக்குள் சென்று அதனுடைய வழக்கமான வேலையை வீரியத்தைக் காட்ட முடிய வில்லை. நம்முடைய எதிர்ப்பு சக்திக்கு முன்னால் அதனால் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஆகவே அது பல புதிய யுக்திகளைக் கையாளுகிறது. மாறு வேஷம் போட்டுக் கொள்கிறது. நாம் ஜெயிக்கிறோம் - வைரஸ் நம்மை எதிர்க்க முடியாமல் மாறு வேஷம் போட்டு ஓடுகிறது என்று தான் அர்த்தம். தோற்று ஓடும் படை போகிற போக்கில் சில பல சேதங்களை விளைவிக்கும் என்பது வாடிக்கைதான்.


மாறுபட்ட வைரஸ் குணங்கள்

வழக்கமான வைரசைவிட வேகமாக பரவும், சுலபமாகத் தொற்றும்; ஆனால் வீரியமாகக் கொல்லாது. வயது முதிர்ந்தவர்களை விட்டு, இளம் வயதினரையும் தாக்கும்.முன்பு போலவே இந்த முறையும் கொரோனாவின் பாதிப்பு பெருநகரங்களில் தான் அதிகம். இந்தியாவின் கிராமங்களில் பாதிப்பும் கிடையாது. மேல்தட்டு மக்களேயே குறிவைக்கும் கொரோனா, சுகாதார வசதிகளே இல்லாத கீழ்த்தட்டு மக்களை அதிகம் பாதிப்பதில்லை.

இதற்கு அவர்களிடம் காணப்படும் மந்தை எதிர்ப்பு சக்தி தான் காரணம்.பல 100 ஆண்டுகளாகப் பல 100 கோடி மக்களை பலி வாங்கிய மலேரியா அண்மையில்தான் ஒழிக்கப்பட்டது. இவற்றைச் சாதித்த பெருமை ஒரு மருந்துக்குத்தான் உண்டு - சின்கோனா மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட குளோரோகுவின் மாத்திரைதான் அது. இந்த மருந்து கொரோனாவிற்கும் அற்புத மருந்தாகும்.

பலம் மிக்க பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் வணிகப் போரில் இந்த மருந்தின் பெருமையைச் சிலர் அழிக்க முயன்றாலும், இதன் அரிய பலனை மருத்துவ வல்லுனர்கள் அறிவார்கள். வாரம் ஒரு முறை ஒரு HCQ மாத்திரையை மருத்துவர் ஆலோசனை யில் எடுத்துக்கொண்டால், கொரோனா வரவே வராது, இது மிகவும் சுலபமானது, சிக்கனமானது, பாதுகாப்பானது. நானே ஆரம்பத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து இதைத்தான் எடுத்து வருகிறேன். இதோடு தினமும் கொரோனா வார்டில் நோயாளிகளைப் பார்த்தும் வருகிறேன்!


பிற தடுப்பு முறைகள்

மிக மிகச் சுலபமான வழிகள் மூன்று.
1. முகக் கவசம் அணிவது

2. சமூக இடைவெளி

3. கைகளைக் கழுவுவதுஜப்பான், கொரியா போன்ற கீழை நாடுகளில் அனைவரும் முகக் கவசம் அணிந்தே எப்போதும் நடமாடுகிறார்கள். யாருடனும் கைகுலுக்குவதும் இல்லை, கட்டிப் பிடிப்பதும் இல்லை. இருவரும் பரஸ்பரம் குனிந்து வணக்கம் சொல்வார்கள் (அவ்வளவு சமூக இடைவெளி). கீழை நாடுகளில் கொரோனா தாக்கம் இல்லாததற்கு இதுவே முக்கிய காரணம்.

வெளியே போய்விட்டு வந்தால் கை, கால்களை கழுவிவிட்டு வீட்டுக்குள் வருவது நம் ஊர் வழக்கம். இதை நாம் மீண்டும் கடைப்பிடித்தால் நல்லது - கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். கிருமிநாசினி, அல்லது சோப்பு தான் வேண்டும் என்று இல்லை. வெறும் தண்ணீரே போதும், தண்ணீர் நல்ல கிருமிநாசினி என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.ஆனால் நடப்பது என்ன? யாரும் முகக் கவசம் அணிவது இல்லை. வேக்சின் போட்டுக் கொண்டால் கூட முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். அப்படியானால் என்ன அர்த்தம் ?

வேக்சினை விட அதிகப் பாதுகாப்பு கொடுப்பது முக கவசம் தான்! முன்பு முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதித்தார்கள். அப்போது மக்கள் ஓரளவு கடைபிடித்தார்கள். இப்போது திடீரென்று பரவி வரும் இந்த அலைக்கு முகக்கவசம் அணியாதது முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.


என்ன செய்ய வேண்டும்

கடலில் குளிக்கச் சென்ற ஒருவன், கரையிலேயே நின்று கொண்டு "அலைகள் சற்று ஓயட்டும் - பிறகு குளிக்கலாம்" என்றால், அலைகள் எப்போது ஓயும்? எப்போது குளிப்பது? அலைகள் இருந்து கொண்டேதான் இருக்கும். அலையோடு அலையாக முங்கிக்கொள்ள வேண்டும். ஊரடங்கால் அனைவரின் வாழ்க்கையும் முடங்கியதை நாம் மறக்க முடியாது.

அதல பாதாளத்தில் விழுந்த நம் பொருளாதாரம் இப்போதுதான் மெல்ல எழுந்து தள்ளாடிக் கொண்டு நடக்கிறது. இன்னொரு ஊரடங்கை யாராலும் தாங்க முடியாது. ஆகவே மேற்கூறிய தடுப்பு முறைகளைச் சரியாக பின்பற்றி, கொரோனா இல்லாத இயல்பான வாழ்க்கையை வாழ்வோம்.

-டாக்டர்.ப.சௌந்தரபாண்டியன்

சிறுநீரக இயல் நிபுணர்.

மதுரை.94433 82830

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X