மதுரை : முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களும் பயணிப்பதால் முன்பதிவு செய்த பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர் என மதுரை தெற்கு ரயில்வே பயணிகள் நலச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
பொதுச்செயலாளர் பத்மநாபன் கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: பயணிகள் தங்கள் வசதிக்காக முன்பதிவு செய்து ரயில்களில் பயணிக்கின்றனர். பயணிகள் கூடுதல் பணம் வழங்கி தங்கள் தேவைக்காக தக்கல், பிரிமியம் போன்ற கட்டணங்களில் பயணிக் கின்றனர். ரயிலில் பயணிக்க மூன்று பிரிவு களில் முன்பதிவு செய்யலாம். உறுதி செய்யப்பட்ட முன்பதிவு, ஆர்.ஏ.சி.,(ரிசர்வ்வேஷன் அகனைஸ்ட் கேன்சலேஷன்), காத்திருப்போர் பட்டியல் பயணிகள் என அறிவிக்கப்படும். இதில் காத்திருப்போர் பட்டியல் பயணிகள் ரயில்களில் பயணிக்க கூடாது.
இருக்கை அல்லது படுக்கை வசதி உறுதி செய்யப்படாததால் அவர்கள் பயணிக்க கூடாது என்ற நடைமுறையுள்ளது.ஆனால் தற்போது பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாலும், விரைவு ரயில்களில் பொதுபெட்டிகள் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலும், பயணிகள் கூட்டம் அதிகரித்து முன்பதிவு செய்த பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் பயணிக்கின்றனர். இவர்களால் பல வழிகளில் தொந்தரவு ஏற்படுவதாக முன்பதிவு செய்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் டிக்கெட் பரிசோதகர்கள் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் பயணிக்கும் காத்திருப்போர் பயணிகளிடம் அபராத தொகையை வசூலித்து விட்டு பயணத்தை தொடர அனுமதிக்கின்றனர்.
இதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்தாலும் திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. 70 பேர் பயணிக்குமிடத்தில் 80 பேர் பயணிக்கும் சூழல் எழுகிறது. இதற்கு ரயில்வே நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE