திருப்பூர்:நுாற்பாலைகள், ஓசையின்றி, ஒசைரி நுால் விலையை கிலோவுக்கு, 20 முதல் 40 ரூபாய் உயர்த்தியுள்ளதால், பின்னலாடை துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
தமிழக நுாற்பாலைகள், கடந்த ஏழு மாதங்களாக, பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தப் படும் ஒசைரி நுால் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால், பாதிப்புகளை சந்தித்துவரும், திருப்பூர் பின்னலாடை துறையினர், நுால் விலையை குறைக்க வலியுறுத்தி, மார்ச் 15ல் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தினர்.
அதிர்ச்சி தந்த நுாற்பாலைகள்கோவை தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கமும்(சைமா), நுால் விலையை சீராக வைத்திருக்க கோரி, நுாற்பாலைகளுக்கு கடிதம் அனுப்பியது. ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி, நுால் விலை பட்டியல் வெளியிடப்படும். வழக்கத்துக்கு மாறாக, கடந்த 1ம் தேதி, விலை பட்டியலை நுாற்பாலைகள் வெளியிடவில்லை. சில நுாற்பாலைகள், நுால் விலையை உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளன.
பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும், 10 - 34ம் நம்பர் நுால், கிலோவுக்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 40ம் நம்பர் 30 ரூபாய்; 50 - 60ம் நம்பர் 40 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.'கொள்முதல் செய்யும் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டும், வாய்மொழியாக, விலை உயர்வு தெரிவிக்கப்படுகிறது' என்கின்றனர், திருப்பூர் பின்னலாடை துறையினர்.
'விலை சீராக வேண்டும்'
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், ''கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, பருத்தி பஞ்சு மற்றும் நுால் ஏற்றுமதி குறைவாகவே உள்ளது. திருப்பூர் உட்பட நாட்டில் உள்ள ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகளவு ஆர்டர் கிடைத்துள்ளது. நுால் தேவை அதிகரித்துள்ளபோதும், நுால் உற்பத்தி, 80 சதவீத அளவிலேயே நடக்கிறது. தட்டுப்பாடு அதிகரிப்பாலேயே, நுால் விலை உயர்ந்துவருகிறது. செயற்கையான நுால் விலை ஏற்றம் கூடாது. இதே நிலை தொடர்ந்தால், பின்னலாடை தொழில் கைநழுவிப்போய்விடும்,'' என்றார்.
போராட்டம் நடத்த முடிவு
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க(டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ''பஞ்சு விலை சீராக உள்ளபோதும், நுால் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. பெரிய, சிறிய நுாற்பாலைகள், போட்டி போட்டு விலை உயர்த்துகின்றன. இதுவரை, கிலோவுக்கு 92 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. நுால் விலை உயர்வை கண்டித்து, திருப்பூர், கரூர், ஈரோடு உட்பட தமிழக ஆடை உற்பத்தி துறையினரை ஒருங்கிணைத்து, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE