மதுரை : இறப்பு விகிதத்தை குறைக்க முற்றிலும் தாமதமின்றி அவசர சிகிச்சை அளிக்கும் வார்டை மதுரை அரசு மருத்துவமனை உட்பட அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் துவக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை கே.கே.நகர் வெரோனிகா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு:எனது தாய் காணிக்கை மேரி சுவாச பிரச்னையால் மதுரை அரசு மருத்துவமனையின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டில் 2020 அக்.20 ல் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை மேற்கொள்ள தாமதமானது. மறுநாள் தாய் இறந்தார். அதே வார்டில் அடுத்தடுத்து 7பேர் இறந்தனர்.மதுரை அரசு மருத்துவமனையில் 2020 ஜன.முதல் ஆகஸ்ட்வரை 4 லட்சத்து 13 ஆயிரத்து 655 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இதில் 5593 பேர் இறந்தனர். இக்காலகட்டத்தில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு.
அங்கு இறப்பு விகிதத்தை குறைக்க தாமதமின்றி சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது.மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவை ரூ.100 கோடியில் நவீனமயமாக்கும் திட்டம் நிலுவையில் உள்ளது. சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சர்வதேச தரத்தில் சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளன. அக்கட்டமைப்பை மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தவில்லை. இங்கு 2012 முதல் 2019 வரை 2070 குழந்தைகள் இறந்துள்ளனர்.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ளதுபோல் இறப்பு விகிதத்தை குறைக்க முற்றிலும் தாமதமின்றி விரைவாக அவசர சிகிச்சை அளிக்கும் வார்டை மதுரை அரசு மருத்துவமனை உட்பட அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும்.
மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவை மேம்படுத்த வேண்டும். குழந்தை களுக்கான புற்றுநோய் இருதயம் ரத்தநாளம் நுரையீரல் கல்லீரல் சிறுநீரகம் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியை ஏற்படுத்தக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு வெரோனிகா மேரி மனு செய்தார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் எஸ்.ஆனந்தி அமர்வு உத்தரவு: மக்கள் நலன் கருதி தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE