புதுடில்லி:திரைப்பட தணிக்கை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைக்கப்பட்டுள்ளதற்கு, திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த, 2015 முதல், மத்திய அரசு, பல்வேறு தீர்ப்பாயங்களை சீர்திருத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, 26 தீர்ப்பாயங்களில், ஏழு தீர்ப்பாயங்கள் கலைக்கப் பட்டு உள்ளன. ஒரு சில தீர்ப்பாயங்கள், அதே போன்ற பணிகளை கையாளும் நீதிமன்றங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதாவை, மத்திய நிதித் துறை இணையமைச்சர், அனுராக் சிங் தாக்குர், பார்லியில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு இன்னும் பார்லி., ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில், மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், தீர்ப்பாயங்கள் சீர்திருத்த அவசர சட்டத்தை பிரகடனம் செய்துள்ளது.இதன்படி, திரைப்பட தணிக்கை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட தீர்ப்பாயங்கள் கலைக்கப்பட்டுள்ளன.
திரைப்பட தணிக்கை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் பணி, நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டு உள்ளது. அதன்படி, இனி, ஒரு திரைப்படத்திற்கு, மத்திய திரைப்பட தணிக்கை குழு சான்றளிக்க மறுத்தால் அல்லது குறிப்பிட்ட காட்சிகளை வெட்டுமாறு நிபந்தனை விதித்தால், திரைப்பட தயாரிப்பாளர் இனி உயர் நீதிமன்றங்களை அணுகித்தான் தீர்வு காண முடியும். தீர்ப்பாயத்தை நாட முடியாது.
இது குறித்து, ஹிந்தி திரைப்பட இயக்குனர்கள், விஷால் பரத்வாஜ், ஹன்சல் மேத்தா ஆகியோர் கூறியதாவது:இது, இந்திய திரையுலகிற்கு ஒரு சோகமான நாள். மத்திய அரசு, தன்னிச்சையாக தீர்ப்பாயத்தை கலைத்துள்ளது. திரையுலகினரை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கியுள்ளன. இப்போது, திரைப்படங்கள் தொடர்பான வழக்கும் சேர்ந்தால், உரிய நேரத்தில், தயாரிப்பாளருக்கு எப்படி நீதி கிடைக்கும் என, தெரியவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE