கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கோவை மாவட்டத்தில்நேற்று முன்தினம் நடந்த சட்டசபை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலுமே, பணம் ஆறாக பாய்ந்ததாக பரஸ்பரம் புகார் எழுந்தது. முந்தைய தேர்தல்களில் எல்லாம், ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி ரகசியமாக பேசிக்கொண்டிருந்த அரசியல் கட்சியினர், இந்த தேர்தலில் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டனர்.
ஒரு கட்சியினர் ஆயிரம் ரூபாயில் ஆரம்பிக்க, இன்னொரு கட்சியினர், 500 ரூபாயில் ஆரம்பித்தனர். 'வீட்டுக்கு வீடு அவர்கள் கொடுத்தால், குறிப்பிட்ட சில காலனிக்காவது தர வேண்டாமா' என்று கேட்டு, பிரதான வேட்பாளர்கள் பணம் கொடுக்க ஆரம்பித்தனர். இதில், பூத் கமிட்டி, ஓட்டு சேகரிப்பவர்களுக்கு கொடுக்கும் பணம், வீட்டுக்கு வீடு பணம் வினியோகிப்பவர்களுக்கு கொடுத்தது எல்லாம் தனிக்கணக்கு.
இப்படி பணம் ஆறாக தொகுதிக்குள் பாய்வதால், அதற்கு தகுந்தபடி ஓட்டுப்பதிவும் தாறுமாறாக அதிகரிக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படியொன்றும் பிரமாதமாக ஓட்டுப்பதிவு அதிகரிக்கவில்லை.தொண்டாமுத்துார் தொகுதியில் கடந்த 2016ல் 66.96 சதவீதமாக இருந்த ஓட்டுப்பதிவு, இந்த தேர்தலில் 71.04 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கோவை வடக்கில், முந்தைய தேர்தலில் 61.72 சதவீதமாக இருந்த ஓட்டுப்பதிவு, இந்த தேர்தலில் 59.08 ஆக சரிந்துள்ளது. வால்பாறையில் கடந்த தேர்தலை காட்டிலும், இந்த தேர்தலில் இரண்டு சதவீதம் ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. மற்ற தொகுதிகளில், ஒரு சதவீதத்துக்கும் குறைவான வித்தியாசமே உள்ளது.'வழக்கமாக ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓட்டுப்போடுவோர் தான் இந்த முறையும் ஓட்டளித்துள்ளனர்.
பணம் ஆறாக பாய்ந்தும் பயன் ஒன்றும் இல்லை' என்கின்றனர், அரசியல் கட்சியினர். 'பணத்தால் ஓட்டுப்பதிவிலோ, தேர்தல் முடிவிலோ எந்த வித்தியாசமும் ஏற்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டால் தான், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு புத்தி வரும். பணம் கொடுக்காத வேட்பாளர்களுக்கும் மரியாதை வரும்' என்கின்றனர், நடுநிலை வாக்காளர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE