தமிழக நிகழ்வுகள்
1. பத்து பேர் மீது வழக்கு
வத்தலக்குண்டு : நிலக்கோட்டை தொகுதியில் வத்தலக்குண்டு பகுதியில் ஓட்டுச்சாவடி மோதல் நடந்தது. இதற்காக குமரேசன், ரவி உட்பட 3 பேர், வீடு புகுந்து தாக்கிய புகாரில் ரவி, வினையத்தான், கணேசன், மருது உள்ளிட்ட தி.மு.க.,வினர் 6 பேர் மீது வழக்கு பதிவானது. பின்னர் ரோடு மறியல் செய்ததாக அ.தி.மு.க., ஒன்றியச் செயலாளர்கள் மோகன், பாண்டியன், நகர செயலாளர் பீர்முகமது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் மீதும் வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2. அ.தி.மு.க., நிர்வாகி மகனுக்கு கத்திக்குத்து
வெள்ளலுார்: வெள்ளலுார் நகர அ.தி.மு.க., இணை செயலாளர் மனோரஞ்சிதம். இவரது மகன் சுரேந்திரன், 34. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும், முன்விரோதம் இருந்துள்ளது.
நேற்றிரவு சுரேந்திரன், வெள்ளலுார் -- சிங்காநல்லுார் சாலையில் வந்து கொண்டிருந்தார். பைக்கில் வந்த இருவர் வழிமறித்து, கத்தியால் குத்தி தப்பினர். அங்கிருந்தோர் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனை அனுப்பினர். சுரேந்திரனின் உறவினர்கள் திரண்டு, சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டனர்.

3. மனைவி குத்திக்கொலைகாதல் கணவன் கைது
தென்காசி: நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார் கணவர். தடுத்த பெண்ணுக்கும் கத்தி குத்து விழுந்தது. ஆலங்குளம் போலீசார் ராஜகோபாலை கைது செய்தனர்.
4. கமுதி அருகே முன்விரோதத்தில் ஒருவர் கொலை;13 பேர் கைது
கமுதி : கமுதி அருகே கழவன் பொட்டல் கிராமத்தை சேர்ந்த ராஜமல்லு 60,என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த துரைபாண்டி குடும்பத்திற்கும் கடந்தாண்டு தீபாவளியன்று வெடி வெடித்தது சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் துரைபாண்டி தரப்பை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் ராஜமல்லுவை தகாத வார்த்தையால் பேசி கிரிக்கெட் பேட் உட்பட பலத்த ஆயுதங்களால் தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.ராஜமல்லு உறவினர் வேல்ராஜ்,பால்பாண்டி காயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மண்டலமாணிக்கம் போலீசில் ராஜமல்லு மனைவி மல்லம்மாள் புகாரில் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வழக்குபதிவு செய்து கழவன்பொட்டலைச் சேர்ந்த துரைபாண்டி 65,சேகர் 32,விஜயேந்திரன் 28,சோலையப்பன் 60,கோபாலகிருஷ்ணன் 36,ஆனந்தகுமார் 26,அருண்குமார் 22,உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

5. ரூ.79 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை: சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 79.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான ஷார்ஜா நகரில் இருந்து திருவனந்தபுரம் வழியாக 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று முன்தினம் மாலை 5:50 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது ஆனாஸ் 28 என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது அவர் அணிந்திருந்த 'சாக்ஸ்' உள்ளிருந்து 59.18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.28 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப் பட்டன.
அதேபோல் துபாய் நகரில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 7:50 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த நைனா முகமது 30 என்பவரை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அதில் அவரது ஆசனவாயிலிருந்து 20.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 446 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 'தங்கம் கடத்திய இருவரும் உள்நாட்டு பயணியராக விமானத்தில் பயணித்து கடத்தலில் ஈடுபட்டது' தெரிய வந்தது.

இந்தியாவில் குற்றம் :
கடத்தல்காரர் சுட்டுக்கொலை
அமிர்தசரஸ்: அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, பஞ்சாபின் கோக்கர் சர்வதேச எல்லை பகுதி வழியாக, நம் நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தி வந்தவரை, பஞ்சாப் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் ஒன்றிணைந்து சுட்டுக்கொன்றனர். அவரிடம் இருந்து, 22 கிலோ ஹெராயின் மற்றும் 'ஏகே' ரக துப்பாக்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

உலக நிகழ்வுகள் :-
ஈரான் கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்
துபாய் : செங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஈரான் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதை இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. செங்கடலில் ஏமன் நாட்டுப்பகுதியில் ஈரானின் எம்.வி. சவிஸ் என்ற கப்பல் நிறுத்தப்பட்டிருந்து.
இந்த கப்பல் மூலமாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் வழங்குவதாக சவுதி அரேபியா உள்ளிட்ட மேற்காசிய நாடுகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் இந்த கப்பல் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பல் சேதமடைந்தது.இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப் படுகிறது.'இந்த தாக்குதலில் கப்பல் சேதமடைந்தாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE