புதுச்சேரி; தபால் ஓட்டு அதிகரித்துள்ளதால், ஓட்டுப் பதிவு சதவீதம் குறைந்துள்ளது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் நடந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில், 81.70 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் 84.08 சதவீத ஓட்டு பதிவானது. இதனால், கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு 2 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஓட்டுப் பதிவு சதவீதம் குறையவில்லை.இந்த தேர்தலில், தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதே, ஓட்டுப்பதிவு சதவீத குறைவிற்கு காரணமாகும்.பொதுவாக தபால் ஓட்டுகளை, ஓட்டுப்பதிவின் போது கணக்கில் கொள்வதில்லை. கடந்த தேர்தலில் 952 ஓட்டுச்சாவடிகள் மட்டுமே இருந்தது. அதில், 6,000 ஊழியர்கள் மட்டுமே பணி புரிந்து தபால் ஓட்டு போட்டனர்.இந்த தேர்தலில் கொரோனா தொற்று காரணமாக ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள், போலீசாரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இவர்கள் தபால் ஓட்டுகள் போட்டுள்ளனர். இதனால், ஓட்டுப்பதிவில் சரிவை காணப்பித்துள்ளது. தபால் ஓட்டுகளில் நேற்று வரை 14,282 வந்துள்ளன.மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயாளிகள் வீட்டில் இருந்தவாறு ஓட்டு போடும் வசதியை இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, 80 வயதிற்கு மேல் 2,929 பேரும், மாற்றுத் திறனாளிகள் 1,546, சுகாதாரத் துறை ஊழியர்கள் 68 பேர், கொரோனா நோயாளிகள் 36 பேர் என 4,579 பேர் தபாலில் ஓட்டு போட்டுள்ளனர்.தபால் ஓட்டு எண்ணிக்கை 18,861 ஆக அதிகரித்துள்ளதன் காரணமாக, ஓட்டுப் பதிவு குறைந்துள்ளது போல் தோற்றமளிக்கிறது. தபால் ஓட்டுகளை சேர்த்தால், கடந்தாண்டுக்கு இணையாக ஓட்டுப் பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE