தமிழகத்தில் உள்ள, ஆறு நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான கொளத்துாரில், கடந்த சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த தேர்தலில், 4.25 சதவீத ஓட்டுகள் சரிந்துள்ளன.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சட்டசபை தேர்தலில் இரண்டு முறை, கொளத்துார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறையும், கொளத்துாரில் போட்டியிட்டு தேர்தலை சந்தித்துள்ளார்.ஆனால் இதுவரை கொளத்துார் தொகுதி சந்தித்த சட்டசபை தேர்தல்களில், இம்முறை தான் குறைந்த ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஓட்டுப்பதிவு, 60.52 சதவீதமாக குறைந்துள்ளது.இந்த தொகுதியில் 2011 சட்டசபை தேர்தலில், 68.47 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. அதன் பின் நடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 64.77 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.மேல் தட்டு மக்கள் அதிகமாக வாழும் இந்த தொகுதியில், மக்களுக்கு தேர்தலில் ஓட்டுப்போடும் எண்ணம் குறைந்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.கொளத்துாரை பொறுத்தவரை தேர்தலுக்கு முந்தைய கணக்கெடுப்பில், ஒரு பாகத்திற்கு, 50 பேர் வரை நிராகரிக்கப்படுவர். இதில் இறந்தவர்கள், வேறு தொகுதிக்கு இடம்பெயர்ந்தவர்கள் அடங்குவர்.ஆனால் இம்முறை, 150 முதல் 200 பேர் வரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறிப்பாக கொளத்துார், 20வது பாகத்தில், 208 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.பொதுமக்கள் தங்களது ஓட்டை செலுத்துவது எப்படி? என தெரியாமல் ஓட்டுச்சாவடியில் இருந்து வீடு திரும்பியதை பார்க்க முடிந்தது.
தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து ஓட்டுப்போட முகாந்திரம் இருந்தும், தேர்தல் அலுவலர்கள் பொதுமக்களை பூத் சிலிப் இல்லை என்ற காரணத்திற்காக திருப்பி அனுப்பிய சம்பவங்களும் நடந்தன.இதுபோன்ற காரணங்களால், கொளத்துார் தொகுதியில் ஓட்டுப்பதிவு குறைந்ததாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-- நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE