எழும்பூர்- சென்னையில், கண்காணிப்பு கேமராக்கள் திருடப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த விஷயத்தில், காவல் துறை அலட்சியமாக உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.சென்னை முழுதும் உள்ள பிரதான சாலைகள், உட்புற சாலைகள் என, அனைத்து பகுதிகளிலும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண, கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிடப்பட்டது.காவல் துறையை பொறுத்தவரை, கண்காணிப்பு கேமராக்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண, மூன்றாவது கண்ணாக உள்ளது.அதன்படி, ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளரும், தங்களது பகுதிக்கு உட்பட்ட இடங்களில், கண்காணிப்பு கேமராக்களை, நன்கொடையாளர்கள் உதவியுடன் அமைத்தனர்.அவற்றை காவல் நிலையங்களில் அமர்ந்தபடி கண்காணிக்கவும், ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், அவை ஒவ்வொன்றாக திருடப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் வருகின்றன.குறிப்பாக, எழும்பூர் காசா மேஜர் சாலையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் திருடப்பட்டுள்ளன. அவற்றை திருடியோர், இன்று வரை கைது செய்யப்பட வில்லை.இதேபோன்று, பல இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் திருடப்பட்டுள்ளன. ஆனால், காவல் துறை மெத்தனமாக உள்ளது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே, திருடப்பட்ட இடங்களில், மீண்டும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, மக்களின் பாதுகாப்பை காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE