தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கும், மத்தியில் ஆளும் மோடி அரசின் வீழ்ச்சிக்கான துவக்கமாகவும், தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பதை, இந்த ஓட்டுப்பதிவு காட்டுகிறது.
- இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜா
'இதெல்லாம் இருக்கட்டும்; இந்த தேர்தலுக்கு பின், கம்யூ.,க்கள் நிலை என்ன, அதை சொல்லுங்கள்...' என, கிடுக்கிப்பிடி போடத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜா பேட்டி.
தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகள், வெறுமனே பட்டதாரிகளை உருவாக்கி தள்ளுவதற்குப் பதில், தொழில்திறன் வாய்ந்தவர்களை உருவாக்கும் வகையில், தன்னைத் தானே புனரமைத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல், அந்த கல்லுாரிகளின் எதிர்காலம், கேள்விக்குறியதாக மாறி விடும்.
- சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா
'உண்மை தான். பணம் பார்ப்பதற்கு மட்டுமின்றி, தரமான வல்லுனர்களை உருவாக்கினால் தான் உண்டு...' என, கூறத் தோன்றும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா பேட்டி.
ஈ.வெ.ரா., கொள்கைகளை ஒழிக்கவே, தமிழகத்திற்கு, பா.ஜ., வந்துள்ளது என, அக்கட்சியின், கர்நாடகா மாநில, எம்.பி., ஒருவர் கூறியுள்ளார். இதன் மூலம், மறைந்திருந்த பூனை வெளியே வந்து விட்டது. பா.ஜ.,வா, ஈ.வெ.ரா.,வா என, பார்த்து விடுவோம். தமிழர்களே சிந்தியுங்கள்.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி

'அந்த எம்.பி., ஈ.வெ.ரா., பற்றி தானே சொன்னார்; நீங்கள் ஏன் தமிழர்களை போராட அழைக்கிறீர்கள்... நீங்கள் அழைக்கும் போதெல்லாம் போராட வர, தமிழர்கள் என்ன உங்கள் வேலையாட்களா; வேறு வேலையில்லாதவர்களா...' என, கோபமாக கேட்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.
வேலையில்லா திண்டாட்டம் மிக தீவிரமாக உருவெடுத்துள்ளது. 71 லட்சத்திற்கும் அதிகமான வருங்கால வைப்பு நிதி கணக்குகள் முடங்கியுள்ளன; முறைசாரா தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் வாய்ப்பந்தல் எவ்வளவு பொய்யானது என்பது, மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி
'இளைஞர்களை வேலை செய்ய விடாமல், போராட மட்டுமே துாண்டும் கம்யூ.,க்கள் தான் இதற்கு காரணமாக இருப்பர்...' என, காட்டம் தெரிவிக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை.
சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல் தீவிரவாதிகளின் வெறிக்கு, 23 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். நக்சல்களாக உள்ளவர்கள் தவறான வழிநடத்தலால், இதுபோன்ற, கொள்கையற்ற, எப்போதும் அடைய முடியாத இலக்கை நோக்கி, கொடூரமாக நடைபோடுகின்றனர்.
- காங்., - எம்.பி., சசிதரூர்
'நீங்கள் சார்ந்துள்ள காங்., நகர்ப்புற நக்சல்களான வரவரராவ், சுதா பரத்வாஜ், கவுதம்நவ்லேகா சுந்தர் போன்றவர்களை ஆதரிக்கிறது. அத்தகையோர் தான், இளைஞர்களை, நக்சல்களாக மாற, தவறாக வழி நடத்துகின்றனர்...' என, பதிலளிக்கத் தோன்றும் வகையில், காங்., - எம்.பி., சசிதரூர் அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE