தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
தமிழக அளவில் கொரோனா தொற்று அதிகரித்த போதும், தர்மபுரி மாவட்டத்தில், துவக்கத்தில் பாதிப்பு வெகுவாக குறைவாக இருந்தது. வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் அங்கிருந்து வந்தவர்களால், மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்தது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, மருத்துவத்துறையினர் என, அனைத்து துறையினர் மூலம் எடுத்த, ஒருங்கிணைந்த நடவடிக்கை மற்றும் மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வால், மாவட்டத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்தது. இதனால், தமிழக அளவில் கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில், பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்து, தர்மபுரி நான்காவது இடத்தை பிடித்தது. இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று மட்டும், 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள, கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று வரை, 6,899 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6,707 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதில், 55 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். ?மேலும், 137 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள், முகக்கவசம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப் பிடிப்பதுடன், அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவவும், கொரோவா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படியும், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE