கிருஷ்ணகிரி: ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., கூறினார்.
கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட எஸ்.பி., பண்டிகங்காதர் கூறியதாவது: ஓட்டு எண்ணும் மையத்துக்கு, மூன்று டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முன், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், மத்திய துணை ராணுவப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் என, 250க்கும் மேற்பட்டவர்கள், கல்லூரி வளாகத்தில், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். பாலிடெக்னிக் கல்லூரியை சுற்றி, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. மூன்று டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், ஆறு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், மூன்று ஷிப்ட் முறையில், பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார். எஸ்.பி., பண்டிகங்காதர், ஏ.டி.எஸ்.பி.,க்கள் அன்பு மற்றும் ராஜி ஆகியோர் ஓட்டு எண்ணும் மையத்தில், தினமும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE