புதுடில்லி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையில்லை எனக்கூறிய மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக, மிகப்பெரிய பேரழிவு நாட்டை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக காங்., மூத்த தலைவர் சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனாலும், அதிதீவிரமாக பரவிவரும் கொரோனாவால், மாநில அரசுகள் விழிபிதுங்கி உள்ளன. இதனால், 18 வயதை நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசிடம், டில்லி, பஞ்சாப், மஹாராஷ்டிரா உள்ளிட்ட அரசுகள் கோரிக்கை வைத்தன. ஆனால், மத்திய அரசு இதனை ஏற்க மறுத்தது.

இது குறித்து காங்., மூத்த தலைவரும் எம்.பி.,யுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ அமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும், இதே கருத்தைத்தான் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. எந்தவிதமான முன்பதிவும் இன்றி அனைத்து வயதினருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமான நேரம் இது.
அறிவியல்பூர்வமற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாடு காரணமாக, ஒவ்வொரு நாளும் பல்வேறு நோய்த் தொற்று உருவாக மத்திய அரசு அனுமதித்து வருகிறது. மிகப்பெரிய பேரழிவு நாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. மோடி அரசைப் போல் உலகில் எந்த ஜனநாயக அரசும், இதுபோல் கொடூரமாக, உணர்வற்று இருந்தது இல்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல், தடுப்பூசி முகாம் வரை, பா.ஜ., மற்றும் மோடி அரசின் தவறான கொள்கைகளால், மக்கள் மிகப்பெரிய விலை கொடுத்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE