ஆமதாபாத்: குஜராத்தில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலையில், சூரத், அகமதாபாத்தில் வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கிற்கு அஞ்சி சொந்த ஊர் திரும்புகின்றனர்.
ஓராண்டிற்கு முன்பு தோன்றிய கொரோனா வைரஸ், தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பின்னரும் முற்றிலும் அழியாமல் பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் 2 தவணைகளாக தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். 7.5 கோடி பேர் முதல் தவனை தடுப்பூசி பெற்றுள்ளனர். அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. சீரம் இந்தியா போன்ற நிறுவனங்களும் தடுப்பூசி உற்பத்தியை ஜூன் மாதத்தில் இரட்டிப்பாக்க உள்ளனர்.

இருப்பினும் இந்தியாவின் முக்கிய நகரங்கள் கொரோனா இரண்டாம் அலைக்கு பயந்து படிப்படியாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஏற்கனவே போட்ட ஊரடங்கிலிருந்தே இந்திய பொருளாதாரம் மீளவில்லை. பல உற்பத்திப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சிறிய, பெரிய தொழில்கள் என பலவும் இழுத்து மூடப்பட்டன. இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் லட்சக்கணக்கில் வேலை இழந்தனர். பள்ளிகள் ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டே கிடக்கின்றன.

இன்னொரு ஊரடங்கு போட்டால் மக்கள் நிச்சயம் அரசு மீது கடும் ஆத்திரமடைவார்கள். அதே சமயம் மக்களும் முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டுகின்றனர். முழு ஊரடங்கினால் ஏற்படும் பெரியளவிலான பாதிப்புகளை கவனத்தில்கொள்ளாமல், நீதிபதிகள் சிலர் அதனையே முழுமையான தீர்வாக நினைத்து ஆலோசனை வழங்குகின்றனர்.
குஜராத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஊரடங்கு விதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இது உ.பி., மற்றும் பீகாரிலிருந்து குஜராத்திற்கு வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.

அவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கியுள்ளனர். அகமதாபாத்திலுள்ள காலுப்பூர் ரயில் நிலையத்தில் இவர்களது கூட்டம் அதிகம் காணப்படுவதாக ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ஒருவர் கூறினார். கடந்த ஆண்டு திடீரென போடப்பட்ட ஊரடங்கால் பலர் தங்கள் மாநிலங்களுக்கு பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்தே சென்ற துயரம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE