பகல் கனவு!
'இந்த முறையாவது, பதவி நீடிக்க வேண்டும்' என, குல தெய்வத்திடம் மனம் உருக வேண்டுகிறார், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ். மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும், அந்த கூட்டணியின் தலைவரான பட்னவிஸால்,
முதல்வராக பதவியேற்க முடியவில்லை. சிவசேனா உள்ளடி வேலை பார்த்தது தான், இதற்கு காரணம். இதையடுத்து, தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார் உதவியுடன், முதல்வர் பதவியில் அமர்ந்தார் பட்னவிஸ். ஆனால், மூன்று நாட்களுக்குத் தான், அவரால் அந்த பதவியில் நீடிக்க முடிந்தது. சிவசேனா, தேசியவாத காங்., - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திடீர் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைத்தன. உத்தவ் தாக்கரே, முதல்வராக பதவியேற்றார். சமீப காலமாக இந்த கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சராக இருந்த, தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக் மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, அதில் உள்ள தேசியவாத காங்., கட்சி, பா.ஜ., வுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
'இது மட்டும் சாத்தியமானால், மீண்டும் முதல்வராகி விடுவேன்' என்கிறார் பட்னவிஸ். எதிர்க்கட்சியினரோ, 'பட்னவிஸ், பகல் கனவு காண்கிறார்' என, கிண்டலடிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE