தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி: தாராபுரத்தில் நான், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பற்றி பேசிய இரண்டு வரிகளை மட்டுமே எடுத்து, என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். இது குறித்து விளக்கம் அளிக்க, எனக்கு அவகாசம் தேவை. ஒரு பகுதி உரையை மட்டுமே கவனத்தில் கொண்டு, என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
'டவுட்' தனபாலு: வாய் இருக்கிறது; வாய் முன், 'மைக்' இருக்கிறது; சுற்றிலும் ஏராளமானோர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதற்காக, சம்பந்தம் இல்லாமல் டில்லி தலைவர்களையும் இழுத்து பேசினீர்கள். இப்போது, வழக்கு பதியப்பட்டதும், பதுங்கும் விதமாக பதில் அளிக்கிறீர்கள்... இது தான், சலசலப்புக்கு அஞ்சாத, பனங்காட்டு நரியின் தன்மையோ என்ற, 'டவுட்' வருகிறது!
நடிகர் சோனு சூட்: கடந்த ஆண்டு கொரோனா பரவல் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நடந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களிடம் அமைதி காக்கும்படியும், பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டோம். இப்போது அவர்களை எல்லாம், கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
'டவுட்' தனபாலு: புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவரவர் சொந்த ஊர்களுக்கு, விமானத்தில் அழைத்துச் சென்ற நீங்கள், என்ன சொன்னாலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களும் கேட்பர். அதில், யாருக்கும், 'டவுட்' இல்லை. ஏனெனில், உங்களின் மனிதாபிமான செயலை, அந்த நேரத்தில் உலகமே போற்றியது!
பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: பூணுால் போட்டிருந்தால் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்று யார் சொன்னது? பூணுால் பிடித்த கை, தேவையெனில் துப்பாக்கியையும் பிடிக்கும். வாஞ்சிநாதனை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காண்பிக்க யார் சொன்னது?
'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்லும் வேகத்தைப் பார்த்தால், பூணுால் போட்டவர்களை, சாதாரணமாக நினைத்து விடக் கூடாது என்பது மட்டும், 'டவுட்' இன்றி புரிகிறது. அதே நேரத்தில், அவர்கள், தேவையின்றி யார் மீதும் வன்முறையை கட்டவிழ்த்து விட மாட்டார்கள் என்பதும் புலனாகிறது. எப்படியோ, அவ்வப்போது, பூணுால் அணிபவர்களுக்கு, தமிழகத்தில் மட்டும் சோதனை வந்த வண்ணமாக உள்ளது. அதற்கு காரணம், சில திராவிட தலைவர்கள் தான் என்பதில், 'டவுட்டே' இல்லை!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE