அவர்களுக்கு ஏன் சலுகை?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அவர்களுக்கு ஏன் சலுகை?

Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (1)
Share
அவர்களுக்கு ஏன் சலுகை?ஆனந்த் வெங்கட், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 72 சதவீதம் மட்டுமே ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. அப்படியென்றால், மீதமுள்ள, 28 சதவீதம் பேர், பெரிய புத்திசாலிகளா? 100க்கும் மேற்பட்ட, கி.மீ., கடந்து, சொந்த ஊருக்கு சென்று, ஓட்டு அளித்தோர் எல்லாம் முட்டாள்களா?என்ன காரணத்தால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், வாக்காளர்கள் ஓட்டு


அவர்களுக்கு ஏன் சலுகை?ஆனந்த் வெங்கட், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 72 சதவீதம் மட்டுமே ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. அப்படியென்றால், மீதமுள்ள, 28 சதவீதம் பேர், பெரிய புத்திசாலிகளா? 100க்கும் மேற்பட்ட, கி.மீ., கடந்து, சொந்த ஊருக்கு சென்று, ஓட்டு அளித்தோர் எல்லாம் முட்டாள்களா?என்ன காரணத்தால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், வாக்காளர்கள் ஓட்டு அளிக்காமல் இருந்திருக்கின்றனர்? ஓட்டு அளிக்க பணம் கொடுப்பது குற்றம் தான். ஆனால் இவர்கள், பணம் தந்தால் கூட ஓட்டு அளிக்க மாட்டார்கள் என்று, தெளிவாகத் தெரிகிறது.ஜனநாயகத்தை மதிக்கத் தெரியாத அரசியல்வாதிகள் மீது, நாம் கோபம் கொள்கிறோம். அதே போல, ஜனநாயகத்தை மதிக்காத குடிமகன்களை என்ன செய்வது? நாட்டில் எல்லாருக்குமே, 'ஆதார்' அட்டை வழங்கியாகி விட்டது. இனி வாக்காளர் விபரங்களை ரயில்வே, பேருந்து, விமான முன்பதிவு,
'சர்வருடன்' இணைக்க வேண்டும். அதை பயன்படுத்தி மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை வர வேண்டும்.ஓட்டளிக்காதோருக்கு, அரசு மானியமாக வழங்கும் தொகையை ரத்து செய்ய வேண்டும்.யாருக்கும் ஓட்டு அளிக்க விருப்பமில்லை என்றால், 'நோட்டா'விற்கு ஓட்டு அளிக்கலாம் என, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிடிவாதமாக, 'நான் ஓட்டு அளிக்கவே மாட்டேன்' என்றால், அவர்களுக்கு நம் நாட்டின் மீதோ, ஜனநாயகத்தின் மீதோ
அக்கறையில்லை என, அர்த்தம்.பின் அவர்களுக்கு, அரசின் சலுகைகள் ஏன் கொடுக்கப்பட வேண்டும்?அவர்கள் ஓட்டு அளிக்காமல் இருப்பதால், தவறான நபர்கள், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க துணை போகின்றனர் என்று அர்த்தம்.தேர்தலில் பங்கு கொள்ளாமல் இருப்பது, சுதந்திரம் அல்ல; ஒரு வகையில் தேசத் துரோகம் என்றே கருத வேண்டும்.ஜனநாயகத்தின் ஆணிவேர், தேர்தல். அதில் பங்கேற்காமல் இருப்போர், தண்டிக்கப்பட வேண்டும்.


கமல் மீது நம்பிக்கை இல்லை!சுந்தாசா, கும்பகோணம், தஞ்சை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: நடிகர் கமல், மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்த போது, ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, தன்னை அறிவித்தார்.ஆனால், அனைத்து தமிழகக் கட்சிகளின் ஒருமித்த கோஷமான, 'கார்ப்பரேட்' எதிர்ப்பு, விவசாய மீட்பு, இலங்கை தமிழர் நலவாழ்வு, மத்திய அரசு எதிர்ப்பு போன்ற வழக்கமான விஷயத்தைத் தான், இவரும் பின்பற்றி வருகிறார்.தேர்தல் அறிக்கை, பிரசாரம் என எதிலும், திராவிடக் கட்சிகள் போலவே, மக்கள் நீதி மய்யமும் செயல்படுகிறது. ஒரு வித்தியாசமும் இல்லை!ம.நீ.ம., பொருளாளரின் நிறுவனத்தில், வருமான வரித் துறை சோதனை சமீபத்தில் நடந்தது. அதை பற்றி விபரம் சேகரித்த பின், முறையாக விசாரிக்கப்படும் என, கமல்
அறிவித்தார்.சில நாட்களுக்கு பின், அது, பா.ஜ.,வின் அரசியல் ரீதியான பழி வாங்கும் நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார். இது, திராவிட கட்சிகளின் பாணி தான்.நேர்மை தான் கொள்கை என்றால், அதற்கு எந்த வகையிலும் ஒத்துவராத ஜாதி மற்றும் வெறுப்பு அரசியல் நடத்தி வருவோருடன் கூட்டணி அமைத்தால், கமல் மீது எப்படி நம்பகத்தன்மை வரும்?கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், ம.நீ.ம., தனியாக போட்டியிட்டு, 3.7 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. சில இடங்களில், வழிப்போக்கர் எல்லாம் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.இப்போது, கமலுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளும், வேட்பாளர்களை தேடின; அந்த அளவிற்கு தான், அக்கூட்டணியின் பலம் உள்ளது.கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தாமல், எல்லா தொகுதிகளிலும் போட்டியிட்டால், ஓட்டு சதவீதம் பெருமளவு சரியும்.இதையெல்லாம் தாண்டி, ஜாதி பலம், இலவசம், ஓட்டுக்கு பணம் என, பழக்கப்பட்ட தமிழக வாக்காளர்கள், அவ்வளவு சுலபமாக, கமலின் அணியை ஆதரிப்பரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.முக்கியமாக, இரு பெரும் கட்சிகளை எதிர்க்க, தெளிவான நடவடிக்கை தேவை; அது, கமலிடம் இல்லை.


பிரிட்டனும் இந்திய காங்கிரசும்!க.சோணையா, திருமங்கலம், மதுரை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மன்னர் குடும்பத்திலும், ஜனநாயகம் தழைக்கிறது என்றால், அது பிரிட்டனில் தான். பதவிக்கும், அதிகாரத்திற்கும் ஆசைப்படாது, இன்றும் சமத்துவம், சமூக நீதிக்காக, தன் அரச குடும்ப வாழ்க்கையையே உதறித் தள்ளியிருக்கிறார், பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மகன் ஹாரி.ஆனால் மன்னர் ஆட்சி நடக்காத, ஜனநாயக நாடான, நம் இந்தியாவிலோ, வாரிசு அரசியல் நடத்தி, அனைத்து பதவி, அதிகாரங்களையும், தங்கள் குடும்பத்துக்குள்ளேயே பங்குபோட்டுக் கொள்கின்றனர், சில
அரசியல்வாதிகள்.'மதசார்பற்ற' என்ற போர்வைக்குள், அதிகார வெறியோடு, அரியணை ஏறுவதற்காகவே அலைகிறது, ஒரு கும்பல்.தன் மனைவி விஷயத்தில், அரண்மனைக்குள் நிற பேதம் இருந்தது என்பதற்காக, தன் அரச குடும்பத்தையே துறந்து, மனைவி, குழந்தையுடன் தனிக் குடித்தனம் சென்றவர், பிரிட்டன் ராணி எலிசபெத்தின் பேரன்.இங்கோ மதம், இனம், மொழி கடந்து ஒற்றுமையுடன் வாழும் நம் மக்களிடத்தில், மத பேதத்தை உருவாக்கி, நாட்டையே பிளவுபடுத்த நினைக்கிறார், இந்திராவின் பேரன் ராகுல்.ஆண்டாண்டு காலமாக, காங்கிரஸ் தலைமை பொறுப்பை, நேரு குடும்பமே ஏற்கும் என்றால், ஜனநாயக நாட்டில், அக்கட்சிக்கு என்ன வேலை?இந்நாட்டை, தங்கள் வாரிசு ஆள வேண்டும்; இல்லையேல், ஆட்டுவிக்க வேண்டும் என, முன்னாள் பிரதமர் நேருவின் குடும்பம் நினைக்கிறது. அதற்கு, தன்மானமிக்க காங்கிரஸ் தலைவர்கள் யாராவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X