நோம் பென்:கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவில் மூடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், கடந்த, 24 மணி நேரத்தில், 113 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர்; இரண்டு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, நாட்டில் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை, 3,028 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை, 23 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரியில், வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு நபர், விதிமுறைகளை பின்பற்றி தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல், இரவுநேர கேளிக்கை விடுதிக்கு சென்றார். அவரால், பலரும் வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தலைநகர் நோம் பென்னில், பள்ளிகள், தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, 500 அறைகளை உள்ளடக்கிய ஓட்டல், கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவமனையாக மாற்றி அமைக்கப் பட்டு உள்ளது. இந்நிலையில், அங்கோரில் உள்ள பிரசித்திபெற்ற பழமையான கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த கோவில்கள் அமைந்துள்ள பகுதி, உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.வரும், 20ம் தேதி வரை, இந்த கோவில்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வர, தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE