ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி அருகே, தமிழக எல்லையில், கேரள மாநில மருத்துவக்கழிவுகள், பிளாஸ்டிக்கழிவுகள் கொட்டிய, மூன்று லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி, தமிழக - கேரள மாநில எல்லையாக உள்ளது. இங்கு, தமிழக எல்லைக்குள், இரட்டைமடை பிரிவு பகுதியில், தனியார் தோட்டத்தில் நேற்று காலை, மருத்துவக்கழிவுகள் கொட்டிய, கேரள பதிவெண் கொண்ட மூன்று டிப்பர் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரத்தை விவசாயிகள் சிறைபிடித்தனர்; டிரைவர்கள் தப்பியோடினர்.ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். இதில், வனத்தை ஒட்டிய பகுதியில் பட்டா நிலத்தில் குழி தோண்டி, பல ஆண்டுகளாக, கேரள மாநிலம் திருச்சூர் பகுதியின் மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி புதைக்கப்பட்டது தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட வாகனங்களை, வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த, நில உரிமையாளர் சாஜு ஆண்டனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த தனியார் நிலத்தில், மூன்றாண்டுகளுக்கும் மேலாக, பல இடங்களில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு, கழிவுகள் புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்காக, அங்கு எப்போதும் ஒரு பொக்லைன் இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளது. கேரள கழிவுகளைக் கொண்டு வரும் வாகனங்களில், கேரள பொதுப்பணித்துறையின் மங்களம் அணைக்கான, 'ஆன் டூட்டி' என, போலி ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE