அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வினரும், ஆட்சிக்கு வந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன், ஓட்டு எண்ணிக்கை நாளை, ஆவலுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.
தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளுடன் சேர்த்து, காலியாக உள்ள, கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும், 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. காலை முதல், மக்கள் விறுவிறுப்பாக ஓட்டுக்களை பதிவு செய்தனர். மதியத்துக்கு மேல், ஓட்டுப்பதிவு சற்று மந்தமானது. ஓட்டுப்பதிவு முடிவில், மாநிலம் முழுதும், 72.78 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.
கரூர் மாவட்டத்தில், அதிகபட்சமாக, 83.92 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில், 70 சதவீதத்திற்கும் குறைவாகவும், சென்னை மாவட்டத்தில், 60 சதவீதத்திற்கும் குறைவாகவும், ஓட்டுப்பதிவு நடந்தது.
எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல், அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது, அனைத்து தரப்பினரிடமும், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து, இரண்டு முறை, ஆட்சி கட்டிலில் அமர்ந்த அ.தி.மு.க., இந்த தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' சாதனை படைக்க, தீவிரமாக தேர்தல் பணியாற்றியது.
அதேநேரத்தில், 10 ஆண்டுகளாக, ஆட்சியில் இல்லாத தி.மு.க., இம்முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்ற குறிக்கோளுடன், தேர்தல் பணியாற்றியது. இவ்விரு கட்சிகளுக்கும் இணையாக, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., கூட்டணியும், நாம் தமிழர் கட்சியும் களப் பணியாற்றின.
தேர்தல் பிரசாரம் துவக்கத்தில், தி.மு.க., கை ஓங்கியது. கருத்து கணிப்புகளும், அவர்களுக்கு சாதகமாகவே அமைந்தன. பிரசாரம் சூடு பிடித்த பின், அ.தி.மு.க., செல்வாக்கு அதிகரித்ததாக, தகவல் வெளியானது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., ஆகியவை அதிக ஓட்டுகளை பெறும் என்றும், தகவல்கள் பரவின.
ஓட்டுப்பதிவு நிறைவடைந்த நிலையில், எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. வரும், 30ம் தேதி மாலை வரை, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
மே, 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. அதுவரை முடிவை அறிய, மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், 'நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது' என, தி.மு.க.,வினரும், 'மீண்டும் எங்கள் ஆட்சிதான்' என, அ.தி.மு.க.,வினரும் கூற துவங்கி உள்ளனர். ஒவ்வொருவரும் தாங்கள் வெற்றி பெறுவதற்கான காரணங்களையும், எதிர்க்கட்சி தோற்பதற்கான காரணங்களையும், பட்டியலிட்டு வருகின்றனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE