வேலுார்:காட்பாடி தொகுதிக்குட்பட்ட கத்தாரிகுப்பத்தில், 998 ஓட்டுகளில், 20 பேர் மட்டுமே ஓட்டு போட்டதால், அங்கு, மறு ஓட்டுப்பதிவு நடத்த, அ.தி.மு.க., வேட்பாளர், தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.
வேலுார் மாவட்டம் காட்பாடி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் துரைமுருகன், அ.தி.மு.க., வேட்பாளர் ராமு உள்ளிட்ட, 15 பேர் போட்டியிட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்தை சேர்ந்த கத்தாரிகுப்பம் கிராமம், காட்பாடி தொகுதியில் வருகிறது. அங்கு, 998 ஓட்டுகள் உள்ளன. கடந்த, 6ல் நடந்த ஓட்டுப்பதிவின்போது, அப்பகுதியினர், 20 பேர் மட்டுமே ஓட்டளித்தனர்.
அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அக்ரஹாரத்தை சேர்ந்த, தி.மு.க., கிளை செயலர் முருகன், 55, கத்தாரிகுப்பத்தில் பழைய டயரை எரித்து, தார் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து உள்ளார். அதில் ஏற்படும் கடும் மாசுவால், அதை மூடக்கோரி, மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்தது தெரிந்தது.
இது குறித்து, காட்பாடி அ.தி.மு.க., வேட்பாளர் ராமு, காட்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி புண்ணியகோட்டியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:காட்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கத்தாரிகுப்பத்தில், ஓட்டுச்சாவடி எண், 239ல், சிலருடைய துாண்டுதலால், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக ஓட்டு போடுவதை தடுக்க, மக்களை திசை திருப்பி, தேர்தல் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஓட்டு எண்ணிக்கை நடக்கும், மே, 2க்கு முன்பாக, இங்கு மறு ஓட்டுப்பதிவு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.இந்த மனு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
புகார் கொடுத்தவரைமிரட்டிய இன்ஸ்பெக்டர்
திருச்சியில், கள்ள ஓட்டுப் போட முயன்றவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்தவர்களையே மிரட்டுவதாக, கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் பரஞ்சோதி போட்டியிட்டார்.
தேர்தல் நாளன்று பகல். 1:00 மணிக்கு, இனாம் சமயபுரம் குமரன் பள்ளி ஓட்டுச் சாவடியில், சிவா உள்பட மூவர், அ.தி.மு.க., வேட்பாளரின் ஏஜன்டுகளாக பணியில் இருந்தனர். அப்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த நான்கு பேர் ஓட்டுச்சாவடிக்குள் வந்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் அடையாள அட்டைகளை கேட்ட போது, அ.தி.மு.க., வேட்பாளரின் ஏஜன்டுகளை தாக்கி உள்ளனர்.
அங்கிருந்தவர்கள் உதவியுடன், அவர்களை பிடித்து, சமயபுரம் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் முத்துவிடம் ஒப்படைத்தோம். அவர்கள் மீது புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், அன்று மாலை, அ.தி.மு.க., ஆதரவாளரான சிவா வீட்டுக்கு சென்ற இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர், ஜாதிப் பெயரை சொல்லித் திட்டியதோடு, மிரட்டி, கன்னத்தில் அறைந்துள்ளனர்.
தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாக்குதலுக்கு உள்ளாகி புகார் கொடுத்தவர் களையே மிரட்டிய, போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE