ராமநாதபுரம்:தமிழகத்தில் ஏப்.15ல் மீன்பிடி தடை காலம் துவங்கி ஜூன் 14ல் நிறைவடைகிறது. தடை காலத்தில் 1.60 லட்சம் மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.5000 தடை கால நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை 1076 கி.மீ., நீண்ட கடற்கரை உள்ளது. இதில் புதிதாக துவக்கப்பட்ட மயிலாடுதுறை உட்பட 14 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இங்கு மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது.கடல்வளத்தை பாதுகாக்கவும், கடலில் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும் மீன்பிடி தடை காலம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்.15ல் துவங்கி ஜூன் 14ல் முடிவடைகிறது. இந்த தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.பாரம்பரிய கரைவலை, மிதவை மீன் பிடிப்பு, துாண்டில் மீன் பிடிப்பு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. தடைகாலத்தில் விசைப் படகுகள் நிறுத்தப்படுவதால் கடலில் மீன் வளம் பெருகும்.
இதனால் படகுகளை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு தடைக்கால நிவாரணத் தொகை வழங்குகிறது.அதன்படி இந்த ஆண்டு சுமார் 1.60 லட்சம் மீனவர் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தலா ரூ.5000 வழங்கப்பட உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE