காரைக்குடி : காரைக்குடியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பு பணியில் சுகாதாரத்துறையினர் மும்முரமாக உள்ளனர்.
கொரோனா பரவலால் 2020 மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது, கொரோனா இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளது. இதனால், தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். காரைக்குடியில் கடந்த சில மாதங்களாக ஓரிருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு 4 முதல் 5 பேர் என பாதிப்பு அதிகரிக்கிறது. இதனால், சுகாதாரத்துறையினர் தடுப்பு மற்றும் ஆய்வுப்பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
காரைக்குடி நகராட்சி கமிஷனர் லட்சுமணன் கூறியதாவது, நகரில் தினமும் 5 பேர்களுக்கு கொரோனா பரவல் ஏற்படுகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படும். வீடு வீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் கண்டறியும் சோதனை நடக்கிறது. காய்ச்சல் மட்டுமின்றி கொரோனா அறிகுறி இருந்தால் உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். இது தவிர தனியார் கிளினிக் டாக்டர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE