சென்னை:'அனைவரும் எளிதில் அணுகும் வகையில், பாஸ்டேக் முறை இருக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் தாக்கல் செய்த மனு:தாம்பரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, பரனுார் மற்றும் ஆத்துார் சுங்கச்சாவடிகளின் ஒப்பந்த காலம், 2019ல் முடிந்து விட்டது. இருந்தும், அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர். சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.
விசாரணையின் போது, 'தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாஸ்டேக் முறை, அனைவரும் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். 'இதுகுறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாகன நெரிசல் இல்லாத வகையில், மாற்ற வேண்டும்.
'சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க முடியாது. சுங்க கட்டண வசூலில், தேசிய அளவில் கொள்கை இருக்க வேண்டும். சுங்கச் சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்' என, முதல் பெஞ்ச் தெரிவித்து, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE