சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு கதை கேட்பது பெரிதும் விருப்பமான ஒன்று. கதைகளால் நிறம் ஏற்றப்பட்ட கூட்டுக்குடும்ப வீடுகளின் சுவர்கள் முன்பெல்லாம் அதிகம்.இப்போது வீட்டில் பெரியவர்களும் இல்லை. சிறார்களுக்கும் நேரம் இல்லை.
புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் அவர்களுடைய ஆர்வத்தை அலைபேசிகள் ஆக்கிரமித்துக் கொண்டன. மணிக்கணக்கில் தன்னிலை மறந்த நிலையில் நம் பிள்ளைகள் இருக்கும்படி தொழில்நுட்பம் அவர்களை வசப்படுத்தி வைத்திருக்கிறது.இதிலிருந்தெல்லாம் நம் வீட்டு பிள்ளைகள் பாதிப்படையாமல் வெளிவர வேண்டும் என்பது தான் ஒவ்வொரு பெற்றோரின் பிரார்த்தனையாக இருக்கிறது. இது அனைத்திற்குமான தீர்வு அவர்களை வாசிக்க வைப்பதில் துவங்குகிறது. அறிவை விட மிகவும் முக்கியமானதுகற்பனைத் திறன் என்கிறார் ஐன்ஸ்டீன். ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்தப் பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமல்லாமல், இனி நாம் அறிந்து கொள்ளப் போவதையும் உள்ளடக்கியது என்றார் அவர். அப்படிப்பட்ட கற்பனைத்திறனை இளம் வயதிலேயே விதைப்பது தான் சாலச் சிறந்தது.
கற்பனை வளம்
தேர்வில் மாணவன் தெரிந்த பதிலை குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பக்க அளவிற்கு எழுதுகிறான் எனில், அதே மாணவன் தெரியாத கேள்விக்கு அதே குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றரை பக்க அளவிற்கு எழுதுகிறான். இதில் சுவாரஸ்யம் ஏற்படுத்தும் காரணி என்பது அவனுடைய கற்பனை வளம். அந்த கற்பனை வளத்தை அபரிமிதமாக அவனுக்கு அள்ளி வழங்குவது வாசிப்பனுபவம் தான்.
கதை வரலாற்றில் சிறார் கதைகள் என்பது உலக இலக்கியப் போக்கில் அன்று முதல் இன்று வரை பேச்சிலும் எழுத்துவாக்கிலும் காணப்படுகின்றன. குழந்தைகளுக்கு கதை சொல்லாத வீடு இல்லை. துவக்கத்தில் இது வாய்மொழியாக இருப்பினும் அச்சு தொழிலின் அதீத வளர்ச்சியில் சிறார் இதழ்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கின.90களுக்கு பிறகு பல சிறுவர் இதழ்கள் வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்பட்டுவிட்டது. உச்சத்தில் இருந்த சிறார் நுால்களின் விற்பனை, இடையில் பெரிய தளர்வுக்கு உள்ளாகி இப்போது மெல்ல தளிர் நடை போட ஆரம்பித்திருக்கிறது.
முதல் நுால்
தமிழில் நமக்குக் கிடைத்த முதல் நுாலான தொல்காப்பியத்தில்''ஒப்போடு புணர்ந்த உவமத்தானும்தோன்றுவது கிளர்ந்த துணிவினானும்என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே”'பிசி' என்று கூறப்படும் விடுகதையை செவிலியர்கள் குழந்தைகளுக்கு அறிவு புகட்டும் வாயிலாக கூறுவார்கள் என குறிப்பிடுகிறது.சங்க காலம், களப்பிரர் காலம் மற்றும் பக்தி இலக்கியங்கள் தோன்றிய காலங்களில், காப்பிய காலம் சிறார் இலக்கியம் பெரிதாக சோபிக்கவில்லை.அந்த வகையில் அவ்வையாரின் ஆத்திசூடியே சிறார் இலக்கியத்தின் சிகரமாகத் திகழத்தக்க முதல்நுால் என்கிறார் பூவண்ணன். இன்றைய தேதியில், தீவிர இலக்கிய வாசிப்பாளர்களும் சரி இலக்கியவாதிகளும் சரி சிறார் இலக்கியம் எனும் வகையை சற்று மாற்றுக் குறைவானதாகவே கருதுகிறார்கள். அதிதீவிர இலக்கிய உலகில் தற்போது இயங்குபவர்கள் கூட ஆரம்ப அரிச்சுவடியிலிருந்து தான் தொடங்க முடியும் என்பது தான் உண்மை.
தினமலர் சிறுவர் மலர்
காலந்தோறும் சொல்லப்பட்டு வரும் பஞ்சதந்திரக் கதைகள், அறிவுரைக் கதைகள், நீதிக்கதைகள், குழந்தைப் பாடல்கள் தாண்டி சிறார் இலக்கியத்திற்கு புதிய பரிமாணம் தேவையில்லையா என்ற கேள்வி நீடித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் பழைய மரபுவழி சிந்தனையிலிருந்து நாம் மீளவில்லையோ என்றெண்ணத் தோன்றுகிறது.என்னுடைய பால்ய நாட்களில் தினமலர் நாளிதழுடன் இணைப்பாக வெளிவரும் சிறுவர் மலரை படிப்பதற்கு ஆவலாக காத்திருப்போம். நாளிதழ் வீட்டுக்கு வந்ததும் சிறுவர் மலர் புத்தகத்தை யார் முதலில் படிப்பது என வீட்டில் பெரிய களேபரமே நடக்கும். அந்த அளவுக்கு புத்தகத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசித்து வாசித்தார்கள். இன்று துாங்கி எழுந்ததும் அலைபேசியின் தொடு திரையில் தான் பெரும்பாலானோர் கண்விழிக்கிறோம்.
அதிலிருந்து மீண்டு புத்தக படிப்பிற்கு திரும்ப வேண்டிய காலம் விரைவில் வரவேண்டும். குழந்தைகளின் இளம் வயதில் அவர்களின் சிந்தையில் பதியும் கருத்துக்கள் சிறப்பாக அமையுமாயின் அவை அக்குழந்தைகள் பெரியவர்களாகும்போது அவர்தம் சிந்தையைச் செம்மை செய்வதில் பேருதவியாக அமையும். குறிப்பாக சிறார் கதைகள், பிள்ளைகளின் நெஞ்சில் பசுமரத்தாணி போலப் பதிந்து அறிவு வளர்ச்சி, சிந்திக்கும் திறன், கற்பனை, பேச்சுத்திறன் போன்றவற்றை வளர்க்கப் பெரிதும் உதவுகின்றன.
சந்திக்கும் சவால்கள்
சிறுவயதில் படிக்கும் பழக்கம் உடையவர்களே பெரியவர்களான பிறகும் தொடர்ந்து புத்தகங்களைப் படித்து வருகிறார்கள். பால்யத்தில் பாடப்புத்தகங்களைத் தாண்டி வாசிக்காதவர்கள், பெரியவர்கள் ஆனதும் வேறு புத்தகங்களைத் தொட்டுகூடப் பார்ப்பதில்லை. எனவே சிறுவயது முதலே பிள்ளைகளிடத்தில் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வளர்க்க வேண்டும். இதில் எண்ணற்ற சவால்களை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.பிள்ளைகளுக்கு புத்தகங்களை வாங்கி தருவதில் துவங்குகிறது முதல் சவால்.
விலையுயர்ந்த ஐஸ்கிரீம், சாக்லேட்ஸ், ஆடை, பொம்மைகள், அலைபேசி என வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் கூட நுால்களை வாங்கிக் கொடுக்க முன்வருவதில்லை. இது மிகப்பெரிய முரண். பிள்ளைகளுக்கு புத்தகங்கள் வாங்கித் தருவது பெரும் பொருட்செலவு என்ற எண்ணம் முதலில் பெற்றோர்கள் மனதிலிருந்து விலக வேண்டும். இதைத்தாண்டி இன்றைய சிறார் இலக்கியம் நிறைய சவால்களை எதிர் நோக்கி இருக்கிறது. அலைபேசி, விதவிதமான செயலிகள், தொழில்நுட்ப விளையாட்டுகள் சூழ்ந்த இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளை வாசிக்க வைப்பது மிகப் பெரிய சவால். கல்வி செயல்பாடுகளை தாண்டியே தகவல்தொழில் நுட்ப சாதனங்களை பயன்படுத்தி வந்த மாணவச் செல்வங்கள் கொரோனாவிற்கு பிறகு தமக்கான அனைத்து தேவைகளுக்கும் அதையே நம்பி இருக்க வேண்டிய நிலை. பள்ளி வகுப்பு நேரங்கள் போக பயிற்சி வகுப்புகளும் இணையத்துடனே தொடர்கிறது. காட்சிவழி கேளிக்கைகள் போல பாடங்கள் கற்பதும் அவர்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவத்தை தந்து கொண்டிருக்கிறது.
பெற்றோர் பங்கு
முதலில் நம் வீட்டு பிள்ளைகளை செய்தித்தாள் வாசிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். செய்தித்தாள்களோடு சிறார் பக்கத்தை வாசிக்க பழக்கிவிட்டால் நாளடைவில் அவர்கள் தீவிர வாசிப்பு தளத்துக்கு சென்று விடுவர். புத்தக வாசிப்பை மாணவச் செல்வங்களின் அடிப்படையான செயல்பாடுகளில் ஒன்றாக நடைமுறைப்படுத்த பல பள்ளிகள், ஆசிரியர்கள் தற்போது முன்வந்துள்ளனர். அதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பது அவசியம்.புத்தக வாசிப்பை வாழ்க்கையின் அடிப்படையான செயல்பாடுகளில் ஒன்றாக கட்டமைக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமை என்று சொல்லலாம்.-பவித்ரா நந்தகுமார், எழுத்தாளர் ஆரணி. 94430 06882
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE