திண்டுக்கல் : 'மிளகில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்' குறித்து, திண்டுக்கல் தோட்டக்கலை உதவி இயக்குனர் காயத்ரி ஆலோசனை வழங்கினார்.
அவர் கூறியது: சிறுமலையில் 215 எக்டேரில் மிளகு சாகுபடியாகிறது. மண்ணில் அதிக ஈரத்தன்மை அதிகமாக உள்ள காலங்களில் வாடல் நோய் தாக்கும். இந்நோய்க்கு காரணமான பைப்டோதோரா கேபசிசி எனும் பூஞ்சை, மண் மற்றும் காற்றில் ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் போது பரவக்கூடியது. நோய் தாக்கினால் கொடியில் இலைப் பகுதியில் வட்டமாக ஆரம்பித்து கருகும். பின் நோக்கி கொடி காய்ந்து வரும்.
வேர் பகுதியில் அழுகல் ஏற்படும். இதை தடுக்க மிளகு சாகுபடி செய்யும் பகுதியில் நல்ல வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும். வேப்பம் புண்ணாக்கு மற்றும் சூடோமோனாஸ் 250 கிராம் கலந்து மண்ணில் இட வேண்டும். போர்டோ கரைசலை 1லி., தண்ணீரில் 1 கிராம் அளவு அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடை கொடிகள் உள்ள இடத்தில் வேர் பகுதி நனையும்படி ஊற்ற வேண்டும்.மே, ஜூனில் சுண்ணாம்பு ஒரு கொடிக்கு 500 கிராம் அளவில் வேர் பகுதியில் மண்ணில் கலந்து விட வேண்டும். இதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம் என, கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE