சென்னை:சென்னை, கோயம்பேடில் தந்தை கண்முன்னே மகன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் 2 சிறுவர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
நெற்குன்றம் சக்தி நகர் படேல் சாலையைச் சேர்ந்தவர் நாராயணன் 23. நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் இவர் நின்றிருந்தபோது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஏழு பேர் கும்பல் தகராறு செய்தனர். வீட்டின் மாடியிலிருந்து பார்த்த அவரது தந்தை பிரம்மதேவன் 'யார் நீங்கள்...' எனக் கேட்டுள்ளார்.அதற்கு மர்மநபர்கள்பதில் அளிக்காமல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் நாராயணனை சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றனர்.
இதை பார்த்த அவரது தந்தை அலறியடித்து கீழே வந்தார். உடனே மகனை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்த தகவலை தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தனஞ்செயன் என்பவருக்கும் நாராயணனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. சில தினங்களுக்கு முன் நாராயணன் தன் நண்பர்களுடன்சேர்ந்து தனஞ்செயன் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரையும் கத்தியால் வெட்டியுள்ளார்.இது குறித்து புகார் ஏதுவும் பதிவு செய்யாமல் பழிக்குப்பழி தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தனஞ்செயனும் அவரது கூட்டாளிகளும் கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு அருகே வைத்து கொலை செய்தது தெரிய வந்தது.இதுதொடர்பாக சாரதி 19, செல்வா 19 மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் என நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தனஞ்செயன் மற்றும் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.தந்தை கண்முன்னே மகன் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE