சென்னை:சிறு வியாபாரம் செய்வதற்கு மாற்று இடத்தை ஒதுக்க வேண்டும் என, கோயம்பேடு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகை பொருட்கள் மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடந்துவருகிறது.கொரோனா பரவல் காரணமாக, 2020 மே மாதம் மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து, திருமழிசையில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டும், மாதவரம் பஸ் நிலையத்தில், பழ மார்க்கெட்டும் திறக்கப்பட்டன.
ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதம், மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது.முதலில் மொத்த விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் சிறு வியாபாரத்திற்கும் விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது.
இதையடுத்து மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் மற்றும் கூலித்தொழிலாளர்களுக்கு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இங்கு பொருட்களை வாங்க வரும் வெளிமார்க்கெட் வியாபாரிகள் காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தால், பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.ஆனால், பல வியாபாரிகள் தங்களது பெயர் மற்றும் முகவரியை தவறாக அளித்து, சுகாதார துறையினரை ஏமாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மார்க்கெட்டில் வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், நாளை முதல் சிறு வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளது.அதன்படி, 5 கிலோவிற்கு மேல் மட்டுமே, பொருட்களை வியாபாரிகளால் விற்பனை செய்ய முடியும். அதற்கு கீழ் விற்பனை செய்தால், அங்காடி நிர்வாக குழு வாயிலாக, வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படஉள்ளது.ஏற்கனவே பல மாதங்களாக சிறு வியாபாரம் நடக்காததால், பல வியாபாரிகள் நஷ்டத்திற்கும், கடன் தொல்லைக்கும் ஆளாகி உள்ளனர்.
எனவே, சிறு வியாபாரம் செய்வதற்கு, முறையாக மாற்று இடத்தை ஒதுக்க வேண்டும் என, வியாபாரிகள்வலியுறுத்தியுள்ளனர்.இது தொடர்பாக, கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை, வியாபாரிகள் இன்று சந்தித்து முறையிடஉள்ளனர்.ஞாயிறு விடுமுறை ரத்து?கொரோனா பரவல் காரணமாக, 2020 செப்., முதல், மார்க்கெட்டில் பல்வேறு கெடுபிடிகள் நடைமுறையில் உள்ளன.அதன்படி, மார்க்கெட் பராமரிப்பு பணிக்காக, மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படுகிறது.
இந்த விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என, வியாபாரிகள் தரப்பில் அங்காடி நிர்வாக குழுவிடம் வலியுறுத்தப்பட்டது.கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், வியாபாரிகளின் கோரிக்கையை அங்காடி நிர்வாக குழு நிராகரித்துள்ளது.அதன்படி, வரும், 11ம் தேதி பராமரிப்பு பணிக்காக மார்க்கெட் மூடப்பட உள்ளது. ஞாயிறு விடுமுறை மாதம் முழுதும் தொடரவும், அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகவுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE