மதுரை : அ.தி.மு.க., மதுரை நகர் 3ம் பகுதி செயலாளர் பி.எஸ்.கண்ணன் அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுதிகளை பிரித்ததால் அதிருப்தியுற்று அவர் விலகியிருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.
தேர்தலை எதிர்கொள்ள வசதியாக, பலருக்கு பதவிகளை வழங்கும் வகையிலும் அ.தி.மு.க., பகுதிகளை பிரித்து புதிய பகுதிகள் நகர் செயலாளரான அமைச்சர் செல்லுார் ராஜூ பரிந்துரைபடி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி ஆறு முதல் எட்டு வார்டுகள் உள்ளடக்கிய பகுதிகள் பிரிக்கப்பட்டு, இரண்டு வார்டுகளுக்கு ஒரு பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பகுதிகளை பிரித்து டம்மியாக்கியிருப்பதாக தலைமைக்கு பகுதி செயலாளர்கள் புகார்களை அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் நகர் 3ம் பகுதி செயலாளராக இருந்த பி.எஸ்.கண்ணன், ''ஆரம்ப கால உண்மை தொண்டனாக இருந்தமைக்கு 13 ஆண்டுகளாக என்னை நகர் மத்திய 3ம் பகுதி செயலாளராக கட்சியின் களப்பணிக்கு உண்மை விசுவாசியாக சேவை செய்ய வாய்ப்பளித்த கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கும், நகர் செயலாளருக்கும், எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி.
இன்று முதல் நான் வகித்த வந்த மத்திய 3ம் பகுதி கழக செயலாளர் பதவியிலிருந்து என்னை விடுவித்து கொள்கிறேன்'' என குறிப்பிட்டு போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார். இதுபோல பிரிக்கப்பட்ட பகுதி செயலாளர்கள் தங்களை 'டம்மி'யாக்கி விட்டதாக தலைமைக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE