புதுச்சேரியில் கொரோனா வரி ரத்து மதுபானங்கள் விலை குறைந்தது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் கொரோனா வரி ரத்து மதுபானங்கள் விலை குறைந்தது

Added : ஏப் 09, 2021
Share
புதுச்சேரி; புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மது பானங்களின் விலை நேற்று அதிரடியாக குறைக்கப்பட்டது.கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக, கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமலானது. இரண்டு மாதங்களுக்கு பின் ஊரடங்கில் தளர்வுகள் அளித்து, புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த மதுக் கடைகள் மே 25ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன.மற்ற

புதுச்சேரி; புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மது பானங்களின் விலை நேற்று அதிரடியாக குறைக்கப்பட்டது.கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக, கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமலானது. இரண்டு மாதங்களுக்கு பின் ஊரடங்கில் தளர்வுகள் அளித்து, புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த மதுக் கடைகள் மே 25ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன.மற்ற மாநிலங்களைவிட, புதுச்சேரியில் மதுபானங்கள் விலை குறைவு. இதனால் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து மதுப் பிரியர்கள் புதுச்சேரிக்கு வருவர்.இதனால், கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக கூறி, மதுபானங்கள் மீது கொரோனா வரியை புதுச்சேரி அரசு விதித்ததால் விலை தாறுமாறாக உயர்ந்தது.அதாவது, புதுச்சேரியில் 920 வகையான மதுபானங்கள் விற்கப்படுகிறது. இவற்றில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் கிடைக்கும் 154 வகை மதுபானங்கள் மீது கொரோனா வரி விதித்து தமிழகத்துக்கு இணையாக விலை உயர்த்தப்பட்டது.புதுச்சேரியில் மட்டும் விற்கும் 766 வகை மதுபானங்களுக்கு 25 சதவீதம் அளவிற்கு கூடுதலாக வரி விதிக்கப்பட்டது.ஆரம்பத்தில், 3 மாதங்களுக்கு மட்டும் கொரோனா வரி அமலில் இருக்கும் என அறிவித்தனர்.ஆனால், 3 முறை நீடிக்கப்பட்டு, கடந்த 31ம் தேதி வரை மதுபானங்கள் மீதான கொரோனா வரி அமலில் இருந்தது. இதற்கிடையில், சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.இந்நிலையில், புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை நேற்று முன்தினம் 7ம் தேதியுடன் கலால் துறை ரத்து செய்துள்ளது. இதையடுத்து, கொரோனா வரி விதிப்புக்கு முன், கடந்தாண்டு விற்கப்பட்ட பழைய விலைக்கே மதுபானங்கள் நேற்று முதல் விற்கப்படுகிறது.மதுபானங்களின் வகையை பொறுத்து குவார்ட்டருக்கு ரூ.120ல் இருந்து ரூ.40 வரை விலை குறைந்துள்ளது. விலை சரிந்துள்ளதால் மது பிரியர்கள் குஷி அடைந்துள்ளனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கைபுதுச்சேரி கவர்னர் மாளிகை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:இந்திய தேர்தல் ஆணைய அனுமதியுடன், கொரோனா சிறப்பு வரியை ரத்து செய்வது குறித்த கலால் துறையின் கோப்பிற்கு கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.அதை தொடர்ந்து, கலால் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், கொரோனா சிறப்பு வரி ரத்து செய்து, வரி விதிப்பிற்கு முன்னதாக இருந்த விலையே 8ம் தேதி (நேற்று) முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் மதுபானக் கடைக்காரர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டும். எல்லையோரக் கடைகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பவர்களை மட்டுமே மதுபானக் கடைகள், விடுதிகளில் அனுமதிக்க வேண்டும். இதனை கலால் துறை கண்காணிக்கும்.இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X