புதுச்சேரி; வில்லியனுார் அருகே பெண்களை மானபங்கம் செய்ய முயன்ற மூன்று வட மாநில வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி வில்லியனுார் கூடப்பாக்கம் காலனி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வீரமுத்து, 30; இவர் நேற்றிரவு 7.30 மணியளவில் தனது மனைவி சங்கீதாவுடன் அப்பகுதியில் தனியார் மதுக்கடை அருகே உள்ள பேக்கரி கடையில் உணவு பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது குடிபோதையில் வந்த 3 வாலிபர்கள் சங்கீதாவின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றனர். உடனே சங்கீதாவின் கணவர் சத்தம் போடவே 3 பேரில் ஒருவன் தப்பியோடினார். அங்கிருந்தவர்கள் இரண்டு பேரை பிடித்து தர்ம அடி கொடுத்து வில்லியனுார் போலீசில் ஓப்படைத்தனர். இவர்கள் உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுனில்பாரதி, 38 ; வினோத் குமார், 26; தப்பியோடியவர் உமேஷ்குமார், 25 ; என தெரிந்தது. புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்வில்லியனுார் பொறையூர் காலனி அருகே 19 வயது பெண் தட்டச்சு பயிற்சி முடித்து விட்டு நேற்று முன் தினம் மாலை 4.00 மணியளவில் வீடு திரும்பினார். அங்குள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது குடிபோதையில் வந்த பீகாரை சேர்ந்த குல்பார் சிங், 20; அவரது கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றார். அவரையும் அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து வில்லியனுார் போலீசில் ஒப்படைத்தனர்.இந்த இரண்டு சம்பவம் குறித்து தனித்தனியே வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE